சமூக ஊடகங்கள் உள்ளிட்ட சேவைகளில் எமோஜி எனப்படும் உருவ எழுத்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பல வகையான எமோஜி எழுத்துகள் உள்ளன. இவற்றில் புதிய எழுத்துகளும் அறிமுகமாகிவருகின்றன. ஏற்கெனவே உள்ளவற்றின் வடிவமைப்பும் மாற்றத்துக்கு உள்ளாவது உண்டு. அந்த வகையில் கைத்துப்பாக்கி எமோஜி இப்போது நீர்த்துப்பாக்கியாக மாறியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் கைத்துப்பாக்கி இமோஜியை நீர்த்துப்பாக்கியாக மாற்றியது. அதன் பிறகு கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவையும் தங்கள் சேவைகளில் கைத்துப்பாக்கியை நீர்த்துப்பாக்கியாக மாற்றின. இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது மேடையில் நீர்த்துப்பாக்கி இமோஜியை கொண்டு வந்துள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான செய்தியை வலியுறுத்தும் வகையில் இது மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.