ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் அதன் லைக் வசதி மிகப் பிரபலம். பிடித்தமானவற்றை லைக் செய்யலாம். பிடிக்காதவற்றை உணர்த்தக்கூடிய டிஸ்லைக் பட்டனும் தேவை என ஒரு கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை ஃபேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பர்க் கவனமாகவே கையாண்டுவருகிறார். இத்தகைய ஒரு பட்டனுக்கான தேவை இருந்தாலும், டிஸ்லைக் வசதியை அளித்தால் வம்பில் முடியலாம் என அவர் அஞ்சுகிறார்.
எனவேதான், டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்யாமல் வேறு பல உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ரியாக்ஷன் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது அதன் தொடர்ச்சியாக, ‘டவுன் வோட் பட்டன்’ அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இணைய உலகில் பேசப்படுகிறது. அதாவது எதிர்த்து வாக்களிப்பது எனப் புரிந்துகொள்ளலாம். இணைய உலகில் இந்த வாக்களிப்பு முறை பிரபலம். ‘ரெட்டிட்’ போன்ற தளங்களில் ஒரு செய்தியை மேலே கொண்டு வர ஆதரவாக வாக்களிப்பதும், அதைப் பின்னுக்குத்தள்ள எதிர்த்து வாக்களிப்பதும் வழக்கம்.
இதே முறையில் எதிர்மறை பின்னூட்டங்களை எதிர்த்து வாக்களிக்கும் டவுன் வோட் பட்டனை அறிமுகம் செய்வது பற்றி ஃபேஸ்புக் பரிசீலித்து வருவதாகவும், முன்னோட்டமாக அமெரிக்கப் பயனாளிகள் சிலரது ஃபேஸ்புக் கணக்கில் அறிமுகம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எப்போது இந்த வசதி அறிமுகமாகும் எனத் தெரியவில்லை.