தொழில்நுட்பம்

சாம்சங் விற்பனையை முந்தியது ஜியோமி: ஆய்வாளர்கள் தகவல்

பிடிஐ

இந்தியாவில் சாம்சங் மொபைல்கள் விற்பனையை சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி முந்தியுள்ளது.

கடந்த 6 வருடங்களாக சந்தையில் முன்னணியில் இருந்த சாம்சங்கை ஜியோமி முந்தியுள்ளதாக கானலைஸ் மற்றும் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2017ன் 4வது காலாண்டில் ஜியோமியின் சந்தை பங்கு 25 சதவீதமாக இருந்தது. 2016ல், இதே நேரத்தில் ஜியோமியின் சந்தை பங்கு வெறும் 9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சாம்சங் நிறுவனத்தின் சந்தை பங்கு கடந்த வருடம் 24 சதவீதமாக இருந்தது 23 சதவீதமாக குறைந்துள்ளது.

மற்றபடி 2017ஆம் ஆண்டு முழுவதும் சாம்சங் நிறுவனம் 24 சதவீத பங்குடன் சந்தையில் முதலிடத்தில் இருந்தது. ஜியோமி 19 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. கடந்த வருடம் 2ஆம் காலாண்டில், ஜியோமி நிறுவனம் குறைந்த விலை மொபைல்கள் விற்பனையின் மூலம் சரியான போட்டியாக இருந்தது. சரியான திட்டமிடல் இருந்ததால் ஜியோமியால் சாம்சங்கின் 6 வருட ஆதிக்கத்தை முந்த முடிந்தது.

ஜியோமி முன்னணியில் முடித்ததோடு, 2017ல் அதிகம் விற்பனையான முதல் 5 மொபைல்களில் ஜியோமியின் 3 மொபைல் மாடல்களும் உள்ளன. முதல் 10 இடங்களில் சாம்சங் மொபைல்களே அதிக இடங்களை பிடித்துள்ளன.

இது பற்றி சாம்சங் தரப்பில், "சாம்சங் பல மைல் தூரம் முன்னணியில் உள்ளது"  என உறுதியாக சொல்லப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT