தொழில்நுட்பம்

கலந்துரையாடலை குலைக்கிறதா ஸ்மார்ட் போன்கள்?

செய்திப்பிரிவு

ஸ்மார்ட் போன்களுடன் அதிகநேரம் செலவிடுவது, மற்றவர்களுடன் உரையாடும் திறனை குறைக்கும் என்று ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

விர்ஜினியா டெக்கை சேர்ந்த உளவியல் பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியை நடத்தியவருமான ஷாலினி மிஸ்ரா கூறும்போது, "ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போதும், தொடர்ந்து அதை பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. தகவல்களை தொடர்ந்து தேடுகிறார்கள். இதனால், ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவர்களது கவனம் வேறு இடத்திலும், வேறு மனிதர்களிடமும் செல்கிறது" என்றார்.

மொபைல் போன்களினால் கவனம் சிதறும்போது, நாம் பேசுபவர்களது முகபாவங்களையும், பேச்சுத் தொனியில் இருக்கும் சிறு மாற்றங்களையும் கவனிக்கத் தவறுகிறோம்.

தங்களால் நேரில் பார்க்க முடியாத, அருகில் இருக்க முடியாத ஆள்களிடம் மேலோட்டமான உறவுகளை மேம்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இதற்கு ஸ்மார்ட் போன்கள் உதவுகின்றன. அடிக்கடி போன்களை எடுத்துப் பார்ப்பதாலும், ஆழமற்ற உறவுகளில் பிணைந்திருப்பதாலும் தங்கள் கண் முன் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து, நிகழ்காலத்திலிருந்து மக்கள் விலகியிருக்கின்றனர் என்று மிஸ்ரா கூறுகிறார்.

இதை பரிசோதித்துப் பார்க்க, காஃபி ஷாப்பிற்கு வரும் 200 நபர்களை ஜோடி ஜோடியாக உட்காரவைத்து ஒரு தலைப்பை விவாதிக்கச் செய்துள்ளார். இப்படி சிறு குழுவாகவோ, ஜோடியாகவோ உட்கார்ந்திருக்கும்போது, பலர் தங்களது போன்களை மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதோடு தங்கள் போன்களை தங்கள் கண் பார்வையில் மேஜையின் மேல் வைத்துள்ளனர்.

"இப்படி அவர்கள் தங்கள் போன்களையே தலை குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதால் எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து பேசுவது குறைகிறது. இதனால் இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிறது" என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT