ஸ்ரீநகர்: ஜம்முவில் ராணுவ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவும், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஐஐடி - ஜம்மு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ராணுவத்துக்கு தேவையான புதிய உபகரணங்கள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “ராணுவத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் அண்ட் டி) என்பது ஆபத்தான முயற்சி. இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அதனையும் தாண்டி சிந்திக்க வேண்டிய அவசியமும் உள்ளது. சில நேரங்களில் அவை எதிர்பார்த்த பலனை தராது. ஆனால், எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மூலதன முதலீடு மேற்கொள்ள வேண்டியது அவசியம்" என்றார்.
இந்த ராணுவ கண்காட்சியில் "முல்" என்ற நான்கு கால்களைக் கொண்ட பன்முக பயன்பாட்டு உபகரணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த முல் உபகரணத்தில் கேமரா மற்றும் ரேடார்கள் பொருத்தப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 கிலோ பேலோட் திறன் கொண்ட இந்த உபகரணத்தை வை-பை அல்லது எல்டிஇ உதவியுடன் தொலைதூரத்திலிருந்து 100 கி.மீ.தூரம் வரை ரிமோட் மூலம் இயக்கமுடியும். பனி சிகரங்கள் முதல் செங்குத்தான மலை உச்சி, அனைத்து நிலபரப்புகளிலும் இதனை பயன்படுத்தலாம்.
இதுகுறித்து ஏஆர்சி வென்ச்சர் பொறியாளர் ஆர்யன் சிங் கூறுகையில், “ எதிரிகள் இருக்கும் இடம் உறுதிபடுத்தப்பட்ட பிறகு அவர் எந்த அறையில் இருக்கிறார் என்பதை இந்த நான்கு கால் உபகரணத்தை பயன்படுத்தி 360 டிகிரி கோணத்தில் படம்பிடிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். இதைபயன்படுத்தி எதிரியை சுட்டு வீழ்த்தவும் முடியும்" என்றார்.
இதனைப் போன்றே மல்டி வெபன் என்கேஜ்மென்ட் சிஸ்டம்என்ற டிரோன் எதிர்ப்பு அமைப்பும் கண்காட்சியில் முக்கிய இடம்பிடித்தது. ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதும், எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிப்பதும் இந்த சிஸ்டத்தின் முக்கிய நோக்கமாகும்.