தொழில்நுட்பம்

போனுக்குள் ஒரு டிராகன்: ஜியோமி ஸ்மார்ட்போன்

சைபர் சிம்மன்

சீனாவின் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி (Xiaomi ) இந்தியாவில் தனது முதல் ஸ்மார்ட் போனை (Mi3 ) அறிமுகம் செய்துள்ளது. உங்கள் பாக்கெட்டில் இருக்கும் டிராகன் என இந்த போனை ஜியோமி வர்ணிக்கிறது.

14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன், இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் போட்டியை மேலும் உஷ்ணமாக்கியுள்ளது.

சீனா தலைநகர் பீஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஜியோமி, ஸ்மார்ட் போன் மற்றும் அவற்றுக்கான அப்ளிகேஷன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமாக உருவாகியுள்ள ஜியோமி, தனது எம்.ஐ. 3 ஸ்மார்ட் போன் மூலம் இந்தியச் சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது.

ரூ.14,999 எனும் விலையில் இந்த போன் புதிய ஸ்மார்ட் போன் பயனாளிகளைக் கவர்ந்திழுக்கக்கூடியதாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் சொந்த வடிவைக் (MIUI ) கொண்டுள்ள இந்த போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 2.3 Ghz பிராசஸரை கொண்டுள்ளது. 2 ஜிபி ராம் திறன் கொண்டது. 5 இன்ச் அதி நவீன டிஸ்பிளே , 13 மெகா பிக்ஸல் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மெகா பிக்ஸல் கேமரா முகப்பிலும் உண்டு. 3050 mAh பேட்டரி பேக் அப் கொண்டது.

இதன் தோற்றம் மெலிதாகவும் (8.1 மீ.மீ அகலம்) பொலிவானதாக வும் இருக்கிறது. இதில் 50 மணி நேரம் பாட்டு கேட்கலாம், 25 மணி நேரம் பேசலாம், 21 மணி நேரம் இண்டெர்நெட் பயன்படுத்தலாம் என இதன் இணையதளம் தெரிவிக்கிறது.

கைகள் ஈரமாக இருந்தாலும் இதன் டச் ஸ்கிரீன் வேலை செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோமி ஜூலை 15 முதல் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியிருக்கிறது. ஆன்லைனில் இது விற்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: >http://www.mi.com/in/

SCROLL FOR NEXT