பிரபலங்கள் பயன்படுத்தும் வெரிஃபைடு அக்கவுண்டுகளை மீண்டும் சரிபார்க்க சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் முடிவெடுத்துள்ளது. அத்தகைய சில கணக்குகளில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து சரிபார்ப்பு முறையை ட்விட்டர் அறிவித்துள்ளது.
ட்விட்டர் தன் ஆரம்ப காலத்தில் பொது நல நோக்கில் செயல்பட்டு வந்த கணக்குகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நீல நிற டிக் மார்க்கை அளித்துவந்தது. இதன்மூலம் அக்கணக்குகளின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டது. பின்னாட்களில் அந்த வசதி தனிநபர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி, பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, 'வெரிஃபைடு அக்கவுண்ட்' என்னும் நீல நிறக்குறி வழங்கப்பட்டது. ஆனால் அத்தகைய சில கணக்குகளில் பதிவிடப்பட்ட கருத்துகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து பிரபலங்களின் 'வெரிஃபைடு அக்கவுண்டு'கள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது. மேலும் அவற்றுக்கான சில வழிகாட்டுதல்களையும் ட்விட்டர் வகுத்துள்ளது.
அதன்படி, ''மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கும் கணக்குகள், வன்முறையை, வெறுப்பைத் தூண்டுபவை, மற்றவர்களைத் துன்புறுத்துபவை, ஆபத்தான செய்முறைகளை மேற்கொள்பவை ஆகியவற்றைக் கொண்ட வெரிஃபைடு அக்கவுண்டுகளின் உறுதிப்படுத்தப்பட்ட தன்மை திரும்பப் பெறப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.