சென்னை: தமிழக முதல்வர் விஜய்-க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், மாநில முதல்வர்களுக்கு வழங்கப்படும் உயர் பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை விஜய்-க்கும் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, விஜய் கட்சி தொடங்கியவுடன் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. இதையடுத்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் ‘சிறப்பு பாதுகாப்புப் படை’க்கு (எஸ்பிஜி) அடுத்த படியான ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு முதல்வர் விஜய்க்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் சிறப்புகள்: மாநில முதல்வர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பாதுகாப்பின் கீழ் இருப்பவர்களுக்கு 24 மணி நேரமும், மத்திய பாதுகாப்புப் படையினர் அடங்கிய 55-க்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய குழு பாதுகாப்பு அளிக்கும்.
என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப் உள்ளிட்ட மத்திய ஆயுதப் படை வீரர்கள் இந்த பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றிருப்பார்கள். அதிநவீன துப்பாக்கிகள் வைத்திருக்கும் கமண்டோக்கள், முதல்வர் வாகனத்தை சுற்றி இருப்பார்கள். குறைந்தது குண்டு துளைக்காத 5 வாகனங்களில் பாதுகாப்பு அளிப்பார்கள்.
முதல்வரின் பயணத் திட்டங்கள், அன்றாட நிகழ்வுகள் என அனைத்தையும் முன்கூட்டியே இந்த பாதுகாப்புப் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். செல்லும் வழித்தடங்கள், நேரங்கள், சந்திப்புகள் என அனைத்தும் பாதுகாப்புப் பிரிவின் அறிவுறுத்தல்படியே பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வளையத்தில் இருப்பவரை யார் சந்திக்க வந்தாலும் அவர்களை சோதனை செய்ய பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு உரிமையும் உண்டு. முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும்போது ‘இசட் பிளஸ்’ பிரிவின் முதல் வாகனத்துக்கும் கடைசி வாகனத்துக்கு இடையே யாருடைய வாகனத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.