ஈரோடு: தமாகா பொதுச்செயலாளர் யுவராஜா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்வதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் திண்டலை அடுத்துள்ள பெரிய செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜா (45). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர் அணி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2011-ல் ஈரோடு மேற்கு தொகுதியிலும், 2021-ல் கிழக்கு தொகுதியிலும், 2026-ம் ஆண்டு மேற்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகக்கூறி தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு யுவராஜா கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 25 ஆண்டுகளாக என் உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து பயணித்த அரசியலில் இருந்து விலகுவதற்கான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி கட்சியின் வளர்ச்சிக்காக பங்களிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் 3 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கும், என்னை ஆதரித்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல் அமைப்பை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.
குறிப்பாக என் இளமைப் பருவம் முதல் என் வாழ்வின் முக்கியமான காலகட்டங்களை இணைத்துக் கொண்ட கட்சியில் இருந்து விலகுவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை சந்தித்து யுவராஜா பேசினார். இதையடுத்து அவர், தவெகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக யுவராஜாவிடம் கேட்டபோது, “தற்போதுதான் தமாகா கட்சியில் இருந்து விலகி உள்ளேன். இரண்டு தினங்களில் செய்தியாளர்களை சந்தித்து, எனது அடுத்த முடிவு குறித்து தெரிவிப்பேன்” என்றார்.