தவெக தம்பிகளை தற்குறிகள் என்று திமுக-வினரும் திமுக அபிமானிகளும் சமூகவலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள். ஆனால் அவர்களோ, அதே சமூகவலைதளங்கள் மூலமாக மக்களின் மனநிலையை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் டிரெண்ட் செட்டர் வேலைகளை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொடக்கத்தில், விஜய்க்கு சுமார் 20 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என எந்தவொரு தரவுகளும் இல்லாமல் ஒரு கணக்கைச் சொன்னார்கள். அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தவெக நிர்வாகிகள், தங்களுக்கு 40 சதவீத அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
வெறும் பேச்சோடு மட்டுமல்லாது... எந்தெந்த வகைகளில் எல்லாம் இதை மக்களை நம்பவைக்க முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் நம்பிக்கையை விதைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான், தவெக தரப்பில் எடுக்கப்பட்டதாகச் சொல்லி தற்போது சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் சர்வே ரிப்போர்ட்.
செங்கோட்டையனின் பனையூர் பயணத்துக்குப் பிறகு தவெக-வுக்கு தனிப்பெரும் சக்தி வந்துவிட்டதாக தவெக தரப்பில் செய்திகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களையும் முன்னாள் எம்பி, எம்எல்ஏ-க்களையும் செங்கோட்டையன் தவெக-வுக்கு அழைத்துவரப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்படும் நிலையில் தான் இந்த சர்வே ரிப்போர்ட்டையும் விட்டுப் பார்த்திருக்கிறது தவெக.
தவெக தரப்பில் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த ரகசிய சர்வேயின்படி, இந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காதாம்.
மேலும், தவெக-வுக்கு 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சர்வே சொல்கிறதாம். 70 தொகுதிகளில் 40 சதவீத வாக்குகளும், 140 தொகுதிகளில் 25 சதவீத வாக்குகளும் தவெக-வுக்கு கிடைக்குமாம், பெண்களில் 58 சதவீதத்தினரும் இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் 80 சதவீதம் பேரும் தவெக-வுக்கு கைகொடுப்பார்களாம்.
தொகுதிவாரியான சர்வேயில், சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 51 சதவீத வாக்குகளும் திருவள்ளூரில் 50 சதவீத வாக்குகளும் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதியில் 48 சதவீத வாக்குகளும் தவெக-வுக்கு கிடைக்கலாம் என்று சொல்கிறதாம் சர்வே முடிவு. முதலில், திமுக-வுக்கும் தங்களுக்கும் இடையில் தான் போட்டி என ட்ரெண்ட் செட் செய்த தவெக, அதை பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாற்றியது.
கரூர் அசம்பாவிதம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் தங்களின் அந்த முழக்கத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தி இருப்பார்கள். அந்தளவுக்கு தவெக தலைமை முகாமில் இருக்கும் வியூக வகுப்பு புள்ளிகள் விஜய்க்காக ஹோம்வொர்க் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் லேட்டஸ்ட் ஹோம்வொர்க் தான் இந்த சர்வே ரிலீஸ் என்கிறார்கள். அதேசமயம், “சுமார் 48 சதவீத வாக்குகளை திமுக கூட்டணியும் சுமார் 39 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணியும் சுமார் 8 சதவீத வாக்குகளை நாதக-வும் தங்கள் வசத்தில் வைத்திருக்கும் போது விஜய்க்கு 40 சதவீத வாக்குகள் வானத்திலிருந்து வந்து கொட்டுமா?” என்ற லாஜிக் கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.
விஜய்க்காக ட்ரெண்ட் செட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வியூகப் புலிகளுக்கும் இது தெரியும். ஆனாலும் கரூர் துயரத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசு மீது பழியை தூக்கிப் போட்ட இவர்கள், தேர்தல் அரசியலில் என்னவெல்லாம் செய்தால் மக்களின் வாக்குகளை ஈர்க்க முடியும் என்பதையும் படித்துவைத்துக் கொண்டு அதற்கேற்ப காரியமாற்றுகிறார்கள்.
இதையெல்லாம் உள்வாங்கியதால் தானோ என்னவோ, திமுக எம்எல்ஏ-வான மருத்து வர் எழிலன், “தவெக-வினரை தற்குறிகள் என்று விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று திமுக-வினருக்கு அட்வைஸ் கொடுத்தார் போலிருக்கிறது.