தமிழகம்

வெற்றிக்கு அடித்தளமாகும் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: உதயநிதி உற்சாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

திமுக இளைஞரணியின் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நாளை (டிசம்பர் 14) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை விவரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினால் 1980-ல் தொடங்கப்பட்ட இளைஞரணி, கழகத்துக்கு வலிமை சேர்த்து களத்தில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கைகளை திசையெங்கும் கொண்டு செல்லும் கருத்தியல் பணிகள் ஒருபுறம், கட்டமைப்பை வலுப்படுத்தி கட்சியின் வெற்றிகளுக்கு துணை நிற்கும் அரசியல் பணிகள் மறுபுறம் என்று இடைவிடாது இயங்கி கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 2 புதிய முன்னெடுப்புகளையும் நமது இளைஞர் அணி மேற்கொண்டுள்ளது.

அதன்படி இளைஞரணியின் சமூகவலைதளப் பக்கங்களை நிர்வகிப்பதற்கு என்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம். ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைகளிலும் நகர, பகுதி, பேரூர், வார்டுகளிலும் அனைத்து பாகங்களிலும் இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளோம்.

ஒட்டுமொத்தமாக 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்புடன் செயல்படும் இளைஞரணி, இந்தியாவிலேயே திமுக-வில் மட்டுமே இருக்கிறது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக வடக்குமண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நாளை நடத்தப்பட உள்ளது.

இது சுமார் 1.30 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கூடும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இதில் திமுகதலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். மேலும், வரவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார். திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடரும் எனும் வெற்றிச் செய்திக்கு அடித்தளமாக இந்த இளைஞரணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு அமையும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT