உயிரிழந்த விஜயகுமார்
தஞ்சாவூர்: பாபநாசம் அருகே போலீஸார் துன்புறுத்தலில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் 3 நாட்களாக உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் வைத்துள்ளனர்.
பாபநாசம் வட்டம், ஆடுதுறை, கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் விஜயகுமார் (31), மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திவ்யா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். விஜயகுமார் சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், விஜயகுமார் தனது குடும்பத்துடன் சென்னை மவுலிவாக்கம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த பிப்.4-ம் தேதி விஜயகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது திவ்யா, மவுலிவாக்கம் போலீஸாரிடம் அளித்த புகாரில், கடந்த ஜன.14-ம் தேதி, விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரை, நகையை திருடியதாக கபிஸ்தலம் போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து துன்புறுத்தி ஓப்புக்கொள்ள வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனால் உடல் உபாதை, மன உளைச்சலில் இருந்த எனது கணவர் விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்தார். ஆனால், மவுலிவாக்கம் போலீஸார் கணவன்-மனைவி தகராறு என வழக்கை மாற்றி எழுதி கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திவ்யா, தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற உறவினர்கள், விஜயகுமாரின் உடலை கடந்த பிப்.6-ம் தேதி சொந்த ஊரான ஆடுதுறைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, விஜயகுமாரின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி, அவரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகுமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால் விஜயகுமாரின் உடலை தகனம் செய்யாமல் வீட்டிலேயே வைத்திருப்போம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக உயிரிழந்த உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.