சென்னை: முகப்பேர், ரெட்டிப்பாளையத்தில் வசித்து வருபவர் சரவணன் (54). பழைய கார்களை விற்பனை செய்து வருகிறார். கடந்த 21-ம் தேதி மதியம் இவர், தனது மகனுடன் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது, அங்கு காரில் வந்த கும்பல் ஒன்று, சரவணன் மற்றும் அவரது மகனை சரமாரியாக தாக்கியது. பின்னர், சரவணனை மட்டும் காரில் கடத்திச் சென்றது.
அவரை முகப்பேர் கிழக்கில், கோல்டன் ஜார்ஜ் நகர் அருகே வீடு ஒன்றில் அடைத்து வைத்தது. இதற்கிடையே, இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் சரவணன் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர், இருப்பிடத்தை கண்டறிந்து சரவணனை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, வட மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், சரவணனிடம் ரூ.7 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த காரை திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்னர் பறிமுதல் செய்தனர்.
இதனால், சரவணன் தன்னை ஏமாற்றி அவரது காரை விற்பனை செய்துவிட்டதாக மணிகண்டன் கோபத்தில் இருந்துள்ளார். மேலும், காருக்காக கொடுத்த பணத்தையும் கொடுக்காததால், கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.