தமிழகம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பும் இளம் வழக்கறிஞர்கள்!

செய்திப்பிரிவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறை வேற்றக் கோரி மக்களவைத் தலைவரிடம் திமுக - காங்கிரஸ் எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மூத்த வழக்கறிஞர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மக்களவைத் தலைவருக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாத னுக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் இளம் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் குடியரசுத் தலைவருக்கு தனித்தனியாக தற்போது கடிதம் அனுப்பி வருகின்றனர். அந்த கடிதத்தில், நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் முற்றிலும் நியாயமற்றது.

அரசியல் உள்நோக்கம் கொண்டது. நீதிபதி சுவாமிநாதன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து லட்சக்கணக்கான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மதம், சாதி வேறுபாடு இல்லாமல் பணிபுரிந்து வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதி லும், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்குவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் ஒரு வழக்கில் மாநில அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இது நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் மற்றும் நீதித்துறையில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் நீதித்துறையை பாதுகாத்து அரசியலமைப்பையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT