சென்னை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவற்றின் மீதான நடவடிக்கை மற்றும் முன்னேற்ற அறிக்கையை கேட்டு செங்கல்பட்டை சேர்ந்த இரா.கோபிநாத் என்பவர் ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், முதல்வரின் தனிப்பிரிவு, குறைதீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஜமாபந்தி மனுக்கள் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்க வழிவகை இல்லை எனக்கூறி, கடந்த 2015-ம் ஆண்டின் பழைய உத்தரவு ஒன்றை மேற்கோள் காட்டி திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பொதுத் தகவல் அலுவலர் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளும் ஆர்டிஐ-யின் கீழ் பொது அதிகார அமைப்புகளாகவே வருகின்றன.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அரசு அலுவலகத்தில் பெறப்பட்டு குறியீட்டு எண் வழங்கப்படும்போதே அவை ஆவணமாக மாறிவிடுகின்றன. அந்த ஆவணங்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் அனைத்து தொடர் நடவடிக்கைகளும் ஆர்டிஐ கீழ் ‘தகவல்’ வரையறைக்குள் அடங்கும்.
எனவே, முதல்வர் தனிப்பிரிவு, குறைதீர்க்கும் நாள் மற்றும் ஜமாபந்தி மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் கோர பொதுமக்களுக்கு முழு உரிமையுண்டு.
எனினும், பெறப்பட்ட மனுக்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க குறைந்தபட்ச அவகாசம் தேவைப்படுவதால், மனு அளித்த 30 நாட்களுக்கு பிறகு ஆர்டிஐ மூலம் இத்தகவல்களை கோரலாம்.
இந்த உத்தரவு தமிழக அரசின் அனைத்து பொது அதிகார அமைப்புகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப உத்தரவிட்டுள்ளது.