புதுச்சேரி அரசியல்வாதிகளைப் போலவே அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் தான். காரணம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நில அமைப்பு அப்படி.
இங்குள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் தமிழகத்தை ஒட்டியும், மாஹே கேரளத்தை ஒட்டியும், ஏனாம் ஆந்திரத்தை ஒட்டியும் அமைந்துள்ளன. ஏனாமில் தெலுங்கு பேசுவோரே அதிகம். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த தேர்தலில் புதுச்சேரி பிராந்தியத்தில் தட்டாஞ்சாவடியிலும் ஆந்திரம் அருகே உள்ள ஏனாமிலும் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி மக்கள் அவருக்கு வெற்றிக் கோப்பையை தந்த நிலையில், ஏனாம் மக்கள் அவரை வெறுங்கையோடு அனுப்பினார்கள்.
முந்தைய காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமைச் சேர்ந்தவர். அந்த ஆட்சியின் கடைசி நேரத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய அவர், என்.ஆர்.காங்கிரஸில் சேர்ந்தார். இருந்த போதும் 2021-ல் தனது ஏனாம் தொகுதியில் தான் போட்டியிடாமல் ரங்கசாமியை போட்டியிட வைத்தார். ரங்கசாமிக்காக மல்லாடி எவ்வளவோ மன்றாடியும் அவரை அவரால் ஜெயிக்கவைக்க முடியவில்லை.
சுயேச்சையாக போட்டியிட்ட கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கிடம் தொகுதியை கோட்டைவிட்டார் ரங்கசாமி. என்றபோதும் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு தனது ஆதரவைத் தந்தார் கொல்லப்பள்ளியார். அதேபோல், தனது ஏனாம் சாரதியான மல்லாடியை டெல்லிக்கு சிறப்புப் பிரதிநிதியாக அனுப்பி சிறப்பு செய்தார் ரங்கசாமி.
இதையடுத்து, ஏனாமில் மல்லாடியாரும் கொல்லப்பள்ளியாரும் இருவேறு அதிகார மையங்களாக அவதாரமெடுத்து ஆட்டங் காட்டினார்கள். எம்எல்ஏ அலுவலகத்தைக்கூட தனக்குக் கொடுக்காமல் தாவா செய்வதாக மல்லாடிக்கு எதிராக கொல்லப்பள்ளி கொந்தளித்தார். அத்துடன் தனது தொகுதிக்காக எதைக் கேட்டாலும் செய்ய மறுப்பதாக சட்டப் பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து சத்தியாகிரகம் செய்யுமளவுக்கு கொல்லப்பள்ளி கோபப்புள்ளி ஆனார்.
இந்த நிலையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு அமைச்சராக இருந்த மல்லாடிக்கு எதிராக ‘மருந்து கொள்முதலில் ஊழல்’ என்ற குற்றச்சாட்டு வெடித்தது. இதுபற்றி காங்கிரஸுக்கும் மல்லாடிக்கும் தனியாக ஒரு டிராக் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், “வரும் தேர்தலில் மீண்டும் ஏனாமில் பாஜக ஆதரவுடன் போட்டியிடுவேன்” என கொல்லப்பள்ளி பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கு போட்டியாக மல்லாடியும் இம்முறை ஏனாமில் வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராய் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
இதுபற்றி கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கிடம் கேட்டதற்கு, "கடந்த முறை சுயேச்சையாக வென்றாலும் புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன். ஆனால், சமீபகாலமாக சில தீய குணம் கொண்ட அரசியல்வாதிகள் தவறான பிரச்சாரத்தை ஏனாம் மக்களிடம் பரப்பி வருகின்றனர். ஆனால் ஏனாம் மக்களின் விருப்பப்படி, வரும் தேர்தல்களில் பாஜக ஆதரவுடன் நிச்சயம் நான் போட்டியிடுவேன்" என்றார்.
ஏனாம் அரசியல்வாதிகளோ, "ஏனாமில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மல்லாடி கிருஷ்ணாராவ். கடந்த முறை, ‘இனிமேல் போட்டியிட மாட்டேன்’ என்று சொல்லித்தான் ரங்கசாமியை இங்கே நிற்கவைத்தார். அப்படிப்பட்டவர் இம்முறை மீண்டும் போட்டியிட தீர்மானித்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு சரிக்கு சமமான செல்வாக்கில் கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கும் இருக்கிறார். இருவரது பின்னணியிலும் ஆந்திர அரசியலின் பெரும் பின்புலமும் உள்ளது.
கொல்லப்பள்ளி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுடன் நெருக்கமாக இருந்து அங்கே தனக்கானதை சாதித்துக் கொள்கிறார். அதேபோல் மல்லாடியும், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனுடன் நேசமாக இருக்கிறார்.
பாஜக-வுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தைச் சொல்லி இம்முறை அந்தக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடுவேன் என்கிறார் கொல்லப்பள்ளி. அதனால், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜககூட்டணி தொடர்ந்தால் ஏனாம் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் பெரும் சிக்கல் ஏற்படும்” என்றனர். ஆக, ஏனாம் சிக்கலையும் சரிசெய்ய டெல்லி ‘மெக்கானிக்’குகள் தான் புறப்பட்டு வரவேண்டும் போலிருக்கிறது!