தென்காசியில் புதிதாக அமைக்கப்படும் புறவழிச்சாலையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யாமல் சாலை அமைக்கப்படுகிறது.

 
தமிழகம்

ரூ.60 கோடியில் தென்காசி புறவழிச் சாலை பணிகள் தீவிரம்

2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

த.அசோக்குமார்

தென்காசி: குற்றாலம் சாரல் சீஸன் காலத்திலும், சபரிமலை சீஸன் காலத்திலும் லட்சக்கணக்கானவர்கள் கடந்து செல்லும் தென்காசி நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அமைக்கப்படும் புறவழிச்சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், பல்வேறு தேவைகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தென்காசிக்கு மக்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடியில் தென்காசி திணறி வருகிறது.

இதனால், தென்காசி ஆசாத் நகரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை சென்றடைய அரை மணி நேரத்துக்கு மேலாகிறது. அதிலும், குற்றாலம் சாரல் சீஸன் மற்றும் சபரிமலை சீஸன் காலங்களில் தென்காசி தொடங்கி குற்றாலம் வரை 6 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

தென்காசி நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் ஆசாத் நகர் அருகே தொடங்கி, இலஞ்சி ரயில்வே மேம்பாலம் அருகில் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

தென்காசி- ஆசாத் நகர், தென்காசி- ஆயிரப்பேரி, தென்காசி- குற்றாலம், தென்காசி- செங்கோட்டை சாலைகளை இணைத்தபடி இந்த சாலை அமைகிறது. இந்த புறவழிச் சாலை பயன்பாட்டுக்கு வரும்போது, தென்காசி நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி கூறும்போது, “ரூ.60 கோடி மதிப்பில் தென்காசி புறவழிச் சாலை 6 கிலோமீட்டர் தொலைவுக்கு 14 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.

புறவழிச் சாலையில் சிற்றாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம்.

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்கட்டமாக பாலம் பணிகளும், 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம்கட்டமாக சாலை பணிகளும் தொடங்கின. 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சாலையில் நீரோடைகளின் குறுக்கே 30 சிறு பாலங்களும், குண்டாறு, சிற்றாற்றின் குறுக்கே தலா ஒரு பெரிய பாலமும் அமைக்கப்படுகின்றன. சிறிய பாலங்கள் பணிகள் முடிவடைந்துவிட்டன.

பெரிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 65 சதவீதம் அளவுக்கு சாலை பணிகள் முடிவடைந்துவிட்டன. திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

மின் கம்பங்கள் மாற்றப்படாமல்...

சாலை அமைக்கப்படும் பகுதிகளில் உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்யாமல் அப்படியே பணிகள் நடைபெற்று வருகின்றன.

மின் கம்பங்களை இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த பணிகளும் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT