படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: பருவமழை பொய்த்ததால், ஆடிப்பெருக்கில் காவிரி ஆற்றுக்குள் இறங்கிய பெண்கள் ஊற்று பறித்து வழிபாடு செய்துள்ளனர்.
‘நடந்தாய் வாழி காவிரி’ என்று, தான் செல்லுமிடமெல்லாம் வளமும், நலமும் செழிக்கச் செய்பவள் காவிரித் தாய். கன்னிப்பெண்ணான காவிரி, ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து கடல்ராஜனை சென்றடைகிறாள் என்பதே ஆடிப்பெருக்கின் ஐதீகம்.
படங்கள்- ர.செல்வமுத்துகுமார்
ஆடி பதினெட்டாம் நாளன்று, பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரளும் டெல்டா மாவட்ட மக்கள், பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித் தாயை வழிபடுவது வழக்கம்.
மேலும், ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின்போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விடுவர். 'கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வம் வழங்க வேண்டும்' என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித் தாயை வணக்கி, தங்களது புதுத்தாலியை பிரித்து கட்டுவர்.
தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா, காவிரியாற்று வெள்ளம் போலவே, காவிரி கரையோர மக்களிடம் மகிழ்ச்சியை கரை புரண்டோட வைக்கும் என்பது நம்பிக்கை.
காவிரி ஆற்றுக்குள் வழிபாடு:
வழக்கமாக ஆடி மாதத்தில் காவிரி நீர் ஆற்றில் கரை புரண்டோடும். அவற்றை காவிரிக் கரையில் நின்று கரையோர மக்கள் வழிபடுவர். ஆனால், தற்போது காவிரி ஆறு ஓடைபோல் ஓடுகிறது. அதனால், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட, காவிரி படித்துறைகள் வழியாக காவிரி ஆற்றுக்குள் இறங்கிய பொதுமக்கள், ஓடை போல ஓடும் தண்ணீர் கரையிலும், பல இடங்களில் ஊற்று பறித்தும் காவிரித் தாயை வழிபட்டனர்.