சென்னை: பெரியமேடு பகுதியில், மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்ணை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த போக்குவரத்து பெண் காவலர்களை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னையில் உள்ள பெரியமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் கனகவள்ளி. கடந்த 25-ம் தேதி காலை பெரியமேடு டெமலோஸ் பாயின்டில் அவர் பணியில் இருந்தார். அதேபோல் பெண் காவலர்கள் கோசலாதேவி, ராஜபிரியா மற்றும் வினோதினி ஆகியோரும் அருகிலுள்ள போக்குவரத்து பாயின்டுகளில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்று உடைகள் கலைந்த நிலையில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த வழியாக சென்றார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காணப்பட்டதால், காவலர் கனகவள்ளி அவரை அழைத்து அன்புடன் பேசியுள்ளார். அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேசியதுடன், தெளிவாக பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தார்.
அந்தப் பெண்ணுக்கு ஓர் உடையை அணிவித்து, அவரிடம் தொடர்ந்து விசாரித்தார். அப்போது அந்த பெண் தனது சொந்த ஊர் தூத்துக்குடி என்றார். அவரிடம் பொறுமையாக பேசி அவரது தந்தையின் செல்போன் எண்ணை பெற்றனர். அதன்பின் அந்தப் பெண்ணின் தந்தையை தொடர்புகொண்டு மகள் சென்னையில் இருப்பதை தெரிவித்தனர்.
மகளை காணாமல் தவித்து வந்த அவரது தந்தை, மறுநாள் சென்னை வந்து பெண் போலீஸாரை சந்தித்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவரது மகளைப் பத்திரமாக ஒப்படைத்தனர். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரிலிருந்து தனியாக ரயிலில் ஏறி அந்தப் பெண் சென்னை வந்தது விசாரணையில் தெரியவந்தது.
பெண் போலீஸாரின் மனிதநேய செயல் பற்றி தகவல் அறிந்த காவல் ஆணையர் அமல்ராஜ் அந்தப் பெண் காவலர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.