நேபாள இயற்கை பேரிடரில் சிக்கி பத்திரமாக மயிலாடுதுறை திரும்பிய ரத்தினகுமார், பூங்குழலி தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்த வட்டாட்சியர் விஜயராகவன்.

 
தமிழகம்

மற்றவர்களின் நிலை தெரியாமல் தூக்கமின்றி தவிக்கிறோம்: நேபாள வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்த பெண் கவலை

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்திரா ஏஜென்சி மூலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் 13 நாள் சுற்றுலா சென்றிருந்தனர்.

இந்நிலையில், ஆக.26-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் அவர்கள் சிக்கினர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ரத்தினகுமார், பூங்குழலி, மணிமேகலை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வெங்கட்ராமன், ராஜேஸ்வரி, புஷ்பலதா ஆகிய 7 பேர் சிக்கினர்.

இவர்களில் ரத்தினகுமார், பூங்குழலி, மணிமேகலை ஆகிய 3 பேர் உயிர்தப்பி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினர். இந்நிலையில் ரத்தினகுமார், பூங்குழலி தம்பதியர் நேற்று மயிலாடுதுறையில் உள்ள தங்கள் வீட்டுக்கு வந்தனர்.

அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டாட்சியர் விஜயராகவன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பூங்குழலி, ரத்தினகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: நேபாளத்தில் எங்கள் குழுவினர் சென்ற வேன்கள் முன்னதாக சென்ற நிலையில், நாங்கள் சென்ற வேன் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் 10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது.

அப்போது குழந்தைகளுடன் மக்கள் ஓடி வருவதையும், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருந்ததையும் பார்த்தோம். கண் இமைக்கும் நேரத்தில் காட்டாற்று வெள்ளம் வந்து எங்கள் வேனுக்கு முன்பகுதியில் இருந்த மலை மீது மோதியது. வெள்ளம் திசைமாறியதால் எங்கள் வேன் தப்பியது.

வேனில் இருந்து இறங்கியபோது சேறும் சகதியுமாக இருந்த பகுதியில் நடக்க முடியாமல் அருகே இருந்த மலை மீது ஏறினோம். மலை ஏற முடியாமல் தவித்த பெண்களுக்கு எனது சேலையை கொடுத்து உதவினேன்.

எனது கணவர் ரத்தினகுமார் கீழே இறங்கி வேனில் இருந்த அனைவரையும் மீட்டு மலை மீது அழைத்து வந்தார். பின்னர் அங்கிருந்த முகாமுக்குச் சென்றோம். இறைவன் அருளால்தான் எங்கள் வேனில் இருந்த அனைவரும் உயிர் பிழைத்தோம்.

அதன்பிறகு மத்திய, மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்புடன் சென்னை திரும்பினோம். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இயற்கைச் சீற்றத்தால் தற்போது கண் மூடி தூங்க முடியவில்லை.

எங்களுடன் வந்த மற்றவர்களின் நிலை தெரியாததால், அவர்களது உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி தவித்து வருகிறோம் என்றார்.

SCROLL FOR NEXT