தமிழகம்

ரயிலில் தவறவிட்ட 5 பவுன், ரூ.43 ஆயிரம் மீட்பு: முதியவரின் நேர்மைக்கு பெண் பயணி நன்றி

செய்திப்பிரிவு

சென்னை: திருப்பூரைச் சேர்ந்த பாரதி (56) என்ற பெண் பயணி, மங்களூரிலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலின் பி-4 பெட்டியில் பயணம் செய்தார். இந்த ரயில் நேற்று காலை சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடைந்ததும், அவர் அவசரமாக ரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து, தனது 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்கம் இருந்த கைப்பையை ரயிலிலேயே தவறவிட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். அதேநேரம். அந்தப் பெட்டியில் பயணித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஜயன் (70) என்ற முதியவர், அங்கு கேட்பாரற்றுக் கிடந்த கைப்பையை கண்டார். அதில் நகையும், பணமும் இருப்பது தெரியவந்ததும் உடனே ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையில், தனது பை காணாமல் போனது குறித்து புகார் அளிக்க பாரதி ரயில்வே காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்தப் பை அவருடையது என்பது உறுதியானது.

இதையடுத்து, நகையையும் பணத்தையும் சரிபார்த்த போலீஸார், முதியவர் விஜயன் முன்னிலையில் அதனைப் பாரதியிடம் ஒப்படைத்தனர். பணத்தையும் நகையையும் மீட்டுக் கொடுத்த முதியவர் விஜயனுக்கு, பயணி பாரதி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT