உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

 
தமிழகம்

பெண்ணின் கண்ணியத்தை போலி சமூக ஊடக பக்கங்களின் விருப்பத்துக்கு விட முடியாது: உயர் நீதிமன்றம்

கி.மகாராஜன்

மதுரை: ‘ஒரு பெண்ணின் கண்ணியத்தை போலி சமூக ஊடக கணக்குகளின் விருப்பத்துக்கு விட்டு விட முடியாது. மார்பிங் மோசடியில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சிங்கப்பூரில் பணியாற்றும் தனது சகோதரியின் புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்களை அகற்ற பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக நான் அளித்த புகாரை விசாரிக்க திண்டுக்கல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார். பின்னர் நீதிபதி, ‘தொழில்நுட்பம் மனித கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். ஆனால், அதை தவறாக பயன்படுத்தி வெளிநாட்டில் வாழும் ஒரு பெண்ணின் கண்ணியம், தனி உரிமை மற்றும் மன அமைதியை சீர்குலைக்கும் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களை பொறுத்தவரை கால தாமதம் என்பது ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தும். டிஜிட்டல் தடயங்கள் எளிதாக அளிக்கக் கூடியவை. இணைய முகவரிகளும், சமூக ஊடக கணக்குகளும் நீக்கப்படலாம்.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது தனியுரிமை மீறல், பெண்ணின் கண்ணியத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இணைய வழி பாலியல் சுரண்டல் மற்றும் பணம் பறிக்கும் குற்றம் ஆகிய மிகக் கடுமையான சைபர் குற்றங்களாகவே கருதப்படும் பாதிக்கப்பட்ட பெண் சிங்கப்பூரில் பணியாற்றி வருவது மட்டும் இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளின் கடமையை குறைக்காது.

வழக்குப் பதிவு செய்யப்படாதது மட்டுமல்ல, மாற்றியமைக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ச்சியான மன உளைச்சலையும், கண்ணிய இழப்பையும் ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கை என்பது குற்றவியல் நடவடிக்கையோடு மட்டும் முடியக் கூடாது.

மாறாக, டிஜிட்டல் ஆதாரங்களை உடனடியாக பாதுகாப்பது மற்றும் சட்டப்படி அந்த ஆபாச உள்ளடக்கங்களை இணையத்தில் இருந்து அகற்றுவது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

ஒரு பெண்ணின் கண்ணியத்தை போலி சமூக ஊடக கணக்குகளின் விருப்பத்துக்கு விட்டு விட முடியாது. மாற்றி அமைக்கப்பட்ட படம் என்பது சாதாரண டிஜிட்டல் குரும்பல்ல. அது ஒரு பெண்ணின் நற்பெயர், தனியுரிமை மற்றும் மனநல பாதுகாப்பின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்.

எனவே, திண்டுக்கல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் புகார் மற்றும் ஆவணங்களை முறையாக பரிசீலித்து குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஜிட்டல் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து சட்டப்படி உடனடியாக பெற்று பாதுகாக்க வேண்டும். மாற்றி அமைக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இணையத்தில் அகற்றவும், தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT