நதியா
வருசநாடு: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, மேகமலை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தலாம் பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்சிகளுக்குட்பட்ட 98 மலைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக துணை ராணுவத்தையும் பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட்டது.
இந்நிலையில் தும்மக்குண்டு ஊராட்சி காந்திகிராமம் வனக்கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மனைவி நதியா (37) நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் நதியா வேதனையில் இருந்து வந்தார். அங்கிருந்து வெளி யேற்றப்பட்டால் எங்கு செல்வது என்று புலம்பிக் கொண்டிருந்தார்" என்றனர். நதியாவுக்கு 2 குழந்தைகள் உள்ளன.