தமிழகம்

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மு.வேல்சங்கர்

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுவடையவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ’முரசு’ என்று பெயரிடப்பட வாய்ப்பு உள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெள்ளிக்கிழமை (அக்.30) தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமை (அக்.31) காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்து காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக் கூடும். இது, மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகே நவ.2-ம் தேதி மாலையில் நகரக்கூடும்.

கேரளா - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து தெற்கு மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, சனிக்கிழமை (அக்.31) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

நவ.1-ம் தேதி வட கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவ.2-ம் தேதி நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.3-ம் தேதி கடலூர், விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.4-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.5, 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நவ.1-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT