சென்னை: அரசு ஊழியர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘2026 அக்டோபர் 19 அன்று தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநரகம், 1973ம் ஆண்டின் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 12-ஐ மேற்கோள் காட்டி, அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைப் பொதுவெளியிலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சிப்பது தொடர்பாகக் கட்டுப்பாடுகளையும் ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கைகளையும் முன்வைத்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் இத்தகைய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுப் பணியில் அரசியல் நடுநிலையைக் கடைப்பிடிப்பது என்பது, அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்பதல்ல. அரசு ஊழியர்கள் அரசின் ஊழியர்களாக இருப்பதற்கு முன்பாக, அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைக் கொண்ட குடிமக்கள். தங்களது ஊதியம், பணிநிரந்தரம், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலைப் பாதிக்கும் அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்கும், நியாயமான கோரிக்கைகளை எழுப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.
அரசின் மீதான விமர்சனத்தை அரசுப் பணிக்கு எதிரான குற்றமாகச் சித்தரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படையையே பலவீனப்படுத்திவிடும். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தையும், 19(1)(b) , ஆயுதமின்றி அமைதியாகக் கூடும் உரிமையையும், 19(1)(c) சங்கங்களை அமைக்கும் உரிமையையும் உறுதிப்படுத்துகின்றன.
இவ்வுரிமைகள் அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என்றாலும், அரசு ஊழியர்கள் என்பதற்காக மட்டுமே அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.
1962ஆம் ஆண்டு காமேஷ்வர் பிரசாத் மற்றும் பிஹார் அரசுக்கு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தடைசெய்வது அரசியலமைப்பின் பிரிவுகள் 19(1)(a), 19(1)(b) மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளை மறுப்பதாகும் என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு அரசு ஊழியர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகிறது. நிர்வாக நடுநிலையைப் பாதுகாப்பது என்ற பெயரில், அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துவதற்கும், தொழிற்சங்கக் குரல்களை ஒடுக்குவதற்கும், ஊழியர்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கும் நடத்தை விதிகளை பயன்படுத்தி அச்சுறுத்துவதும், நியாயமான விமர்சனத்தை மவுனமாக்கும் நோக்கில் நிர்வாகக்கட்டுப்பாடுகளை பயன்படுத்தப்படுவதும் ஜனநாயக விரோதமானது.
தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு மக்களின் விமர்சனத்தைச் சகித்துக்கொள்ள வேண்டிய ஜனநாயகப் பொறுப்பு உண்டு. எதிர்ப்புக் குரல்களை ஒழுங்கு நடவடிக்கை அச்சுறுத்தல்களால் கட்டுப்படுத்துவது ஜனநாயக ஆட்சிமுறையின் அடையாளமல்ல.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழியர்களிடையே அச்சத்தையும் கீழ்ப்படிதலையும் திணிக்க முயல்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அரசு ஊழியர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அரசின் கொள்கைகளை விமர்சித்தல் அல்லது நியாயமான பணிசார் குறைகளை வெளிப்படுத்துதல் மட்டுமே காரணமாகக் கொண்டு அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது. கருத்து வேறுபாட்டை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, கருத்துச் சுதந்திரம், தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஜனநாயக விவாதத்திற்கான இடத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை.
விமர்சனத்தை ஏற்றுக்கொள்வது ஆட்சியாளர்களின் பொறுப்பு. அரசுப் பணியின் நடுநிலையைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை முடக்கும் அச்சுறுத்தல் அரசியலை உடனடியாகக் கைவிடவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு , தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.