சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்ச் 8-ம் தேதி ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மாநாடு கூட்டினால் திமுக-வுக்கு திருப்புமுனையாக அமையும் என்பது கருணாநிதி காலம் தொட்டே இருக்கும் நம்பிக்கை 1956 மே மாதம், திருச்சியில் நடைபெற்ற திமுக-வின் 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேர்தல் களத்துக்குள் அடியெடுத்து வைத்தது திமுக. அதுதான் திமுக வரலாற்றில் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதன்பின், 6-வது மாநில மாநாடு 1990-லும், 8-வது மாநில மாநாடு 1996-லும், 9-வது மாநில மாநாடு 2006-லும், 10-வது மாநில மாநாடு 2014-லும், 11-வது மாநில மாநாடு 2021-லும் திருச்சியில் தான் நடைபெற்றது. இதில், 1990-ல் 6-வது, 2014-ல் 10-வது மாநில மாநாடுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் திமுக வெற்றி பெறவில்லை. மற்ற மாநாடுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக-வே வெற்றி பெற்றதால், திருச்சியில் மாநாடு கூட்டினால் திமுக-வுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில், தற்போது திமுக-வின் 12-வது மாநில மாநாடு வரும் மார்ச் 8-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாகவே திருச்சி மாநாட்டை திமுக அறிவித்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். திமுக-வின் திருச்சி மாநாடு சென்டிமென்ட் இந்தத் தேர்தலிலும் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.