அதிமுக கூட்டணியில் அன்புமணி இடம்பிடித்துவிட்டதால் ராமதாஸ் திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார். இதனால் விசிக முறைத்துக் கொள்ளாமல் இருக்க அந்தக் கட்சியையும் சமாதானம் செய்யும் வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியினரும் இரண்டு பிரிவாகி நிற்கிறார்கள். குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், மாற்று கட்சித் தலைவர்கள் என பலதரப்பும் இருவரிடமும் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பலனேதும் கிடைக்காததால் தந்தையும் மகனும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.
பாமகவில் உள்ள 5 எம்எல்ஏ-க்களில் ஜி.கே.மணியும் இரா.அருளும் ராமதாஸுக்கு ஆதரவாகவும், எஸ்.பி.வெங்கடேஸ்வரன், எஸ்.சதாசிவம், சி.சிவக்குமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் நிற்கிறார்கள். கட்சியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதற்கிடையில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணியே இருப்பார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மாம்பழம் சின்னத்தையும் அன்புமணி தரப்புக்கே ஒதுக்கியுள்ளது. இதை ஆட்சேபித்துள்ள ராமதாஸ், அன்புமணி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திலும் காவல் துறையிலும் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், திடீரென அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்த அன்புமணி, கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் தருவதற்கு அதிமுக ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ராமதாஸ் தரப்பு திமுக-விடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்த்தால், கூட்டணியை விட்டு வெளியேறு முடிவில் இருக்கிறது விசிக. இதனால் ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்கவும், விசிக-வை கூட்டணியில் தக்க வைக்கவும் வடமாவட்ட மூத்த அமைச்சர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதேசமயம் 10 தொகுதிகளுக்கு மேல் ராமதாஸ் கேட்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பினரிடம் கேட்ட போது, “பாமக-வின் ஆணிவேரான வன்னியர் சங்கம் முழுவதும் ராமதாஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதனால், இந்த தேர்தலில் ராமதாஸ் யார் என்பதை மகன் அன்புமணிக்கு நன்கு புரியவைப்பார். அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால், அங்கு செல்ல வாய்ப்பு இல்லை.
திமுக-வா, தவெக-வா என நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டபோது பெரும்பாலானவர்கள் திமுக கூட்டணிக்குச் சென்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தனர். அதனால், திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ராமதாஸ் மகளும், கட்சியின் செயல் தலைவருமான காந்தி, ஜி.கே.மணி. இரா.அருள், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்” என்றனர்.