தமிழகம்

25 ஆண்டுகளாக அதிமுக ஆதிக்கம் செலுத்தும் கிணத்துக்கடவு தொகுதியில் முடி சூடுமா திமுக?

இரா.கார்த்திகேயன்

கோவை: கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிமுக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், நடைபெற உள்ள தேர்தலில் கிணத்துக்கடவு திமுக வசமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக் கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் மதுக்கரை நகராட்சி, கிணத்துக்கடவு, வெள்ளலூர், எட்டிமடை, திருமலையாம்பாளையம், ஒத்தக்கால் மண்டபம், செட்டிபாளையம் ஆகிய 6 பேரூராட்சிகளும், சொக்கனூர், பொட்டையாண்டிபுரம், வடபுதூர், சோலவம்பாளையம், குதிரைபாளையம், முத்தூர் ஆகிய 7 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

கோவை மாநகராட்சியின் வார்டுகள் 94 முதல் 100 வரை, குறிச்சி மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும்.

கல்குவாரி, விவசாயம் மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் உள்ளன. தக்காளி மற்றும் தென்னை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

          

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

கிணத்துக்கடவு சந்தை மொத்த காய்கறி வியாபாரிகள் கூறும்போது, “ஜூலை முதல் நவம்பர் வரையிலான பருவத்தில், தினமும் சுமார் 250 டன் தக்காளி அறுவடை செய்யப்பட்டு எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் திருச்சி உள்ளிட்ட சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளால், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது” என்றனர்.

முத்தூரை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிம வளம் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

வெடிபொருட்களை அதிகம் பயன்படுத்துவது, ஆழமான குவாரிகளுக்குள் தண்ணீர் வடிந்து, பாசனத்தைப் பாதிப்பது, கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளால் கிராமச் சாலைகள் நாள்தோறும் சேதமடைவது என பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்திக்கிறோம்” என்றனர். சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றொரு பிரச்சினையாக நீடிக்கிறது.

ஆழியாறு பகுதியிலிருந்து வரும் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. நகர்ப்புறப் பகுதியில், கோவை மாநகராட்சியின் சுமார் 1,100 டன் கழிவுகள் தினமும் பதப்படுத்தப்படும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிலிருந்து வரும் நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் துர்நாற்றம் பெரும் பிரச்சினையாக உள்ளன.

தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச்சூழலை மேம்படுத்த வேண்டும் என பல தேர்தல்களில் வலியுறுத்தினாலும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை” என்கின்றனர், பொதுமக்கள். கிணத்துக்கடவில் உள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இட நெருக்கடி காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், மண்பாண்டத் தொழிலுக்கு ஏற்ற களிமண்ணை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

அதிமுக வசம்

1967 முதல் இத்தொகுதியில் 13 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமுக நான்கு முறை, அதிமுக பலமுறை வெற்றி பெற்றுள்ளது. 2001 முதல் அதிமுக வசமே இத்தொகுதி உள்ளது. அதிமுக வேட்பாளர் தாமோதரன் 2001, 2006, 2011 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.

2016-ம் ஆண்டில் அதிமுக சார்பில் சண்முகம் வெற்றிபெற்றார். தற்போதைய தேர்தலில், அதிமுகவின் எஸ்.தாமோதரன் மீண்டும் களம் காண்கிறார். அவரை எதிர்த்து திமுகவின் எஸ்.சபரிகார்த்திகேயன் போட்டியிடுகிறார்.

25 ஆண்டுகளாக அதிமுக இத்தொகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. எப்படியாவது இத்தொகுதியில் முடி சூடும் முனைப்பில் திமுக களம் இறங்கி உள்ளது. இரு கட்சிகளுக்குமான போட்டி கடுமையாக இருக்கும் என்றும், நாம் தமிழர் கட்சியில் பானுப்பிரியா, தமிழக வெற்றிக்கழகத்தில் கே.விக்னேஷ் ஆகியோருக்கு கிடைக்கும் வாக்குகளும் அதிமுக, திமுகவின் வெற்றி, தோல்விக்கு காரணமாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 147068

பெண் - 158774

3-ம் பாலினத்​தவர் - 36

மொத்த வாக்​காளர்கள் - 305878

SCROLL FOR NEXT