திருவண்ணாமலை: “இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணியில் பாமக இடம் பெறும் என்பது அனைவராலும் பேசப்படும் ஒரு வதந்தி” என்று தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாமக தலைவர் அன்புமணியின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நவீன பொது சுகாதார வளாகத்தை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சவுமியா அன்புமணி இன்று (செப்.30) திறந்துவைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை ஆன்மிக நகரில் பக்தர்களுக்காக பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அத்தியந்தல், அடி அண்ணாமலை பகுதியில் நவீன பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று பாமக சார்பில் சட்டப்பேரவையில் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.
பாமகவின் நீண்ட நாள் கோரிக்கை என்பது அனைத்து ஏரிகள், குளங்கள், அணைகள் தூர்வார வேண்டும் என்பதுதான். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.
இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்பது அனைவராலும் பேசப்படும் ஒரு வதந்தி. அதில், உண்மை இல்லை.
காவல் துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறை சரி செய்யப்படும் என தவெக அரசு தெரிவித்துள்ளது. அப்படி செய்தால் கண்டிப்பாக சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் வரும்.
ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களை முழுமையாக பயன்படுத்தினால் சட்டம் - ஒழுங்கில் சிறப்பான இடத்துக்கு காவல் துறையை கொண்டு செல்ல முடியும்.
பாமக ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அனைத்துக் கட்சிகளும் மதுவை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள். மது ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து பாமக குரல் கொடுக்கும்’’ என்றார்.