கோப்புப் படம்: ம.பிரபு
திமுக அளித்த வாக்குறுதிகளை, அதன் எண் வரிசையில் சுட்டிக்காட்டி, ‘இந்த வாக்குறுதி என்னவானது? அது என்னவானது?’ என்று கேள்விக்கணைகளால் அரசை துளைத்துக் கொண்டிருக்கின்றன சமீபகாலமாகவே தமிழக எதிர்க்கட்சிகள். அந்த வரிசையில் இப்போது திமுகவை நோக்கி வீரியமாகப் பாயும் கேள்விக்கணை ‘வாக்குறுதி எண் 309 என்னவானது?’ என்பதே!
கடந்த 2003-ம் ஆண்டு, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசால், பழைய ஒய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 ஏப்.1 முதல் புதிய ஒய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தியது.
ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆயுதப்படைகளைத் தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கட்டாயம் பொருந்தும். மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பின்பற்றுகின்றன.
தமிழகம் போல் பல மாநிலங்களும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்ப்பட்டாலும் கூட அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக எழுந்த எதிர்ப்பால், இந்தத் திட்டத்தில் இருந்து சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சில மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது முன்வைக்கப்பட்டு, ஆட்சி அமைந்த பின்னர் அது நிறைவேற்றப்பட்டதும் என்பது கவனிக்கத்தக்கது.
அந்த வரிசையில், திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 309-வது வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டதுதான் ‘ஆட்சிக்கு வந்தபின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும்’ என்பது.
ஆனால், இதோ 2026 பிறக்கவிருக்கிறது, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலே வந்துவிடும். ஆனால், இன்னும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகவில்லை என்று போராட்டக் களங்கள் தகிக்கின்றன.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ் - Contributory Pension Scheme) ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோல் ஜாக்டோ - ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன.
ஜன.6 டெட்லைன்: இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அண்மையில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது தோல்வி அடையவே, ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் (ஜாக்டோ - ஜியோ) கூட்டாக அறிவித்துள்ளன.
இந்தப் போராட்டம் வீரியமடையும் சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் ஏன் வலிற்யுறுத்துகின்றனர், அதை அமல்படுத்து அரசு ஏன் தயங்குகிறது என்ற கேள்விகள் எழுகின்றன. அது குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.
பழைய ஓய்வூதியத் திட்டம் ஏன் கோரப்படுகிறது?
பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகான நிதி உத்திரவாதத்தை வழங்குவதாக இருந்தது. அதாவது, நிலையான மாத வருமானத்துக்கு உறுதியளித்தது. ஓர் அரசு ஊழியர் / ஆசிரியர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கியது.
பழைய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள் பணிக்கு மாநிலத்திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூதியமாகக் கிடைக்கிறது. கம்யூட்டேஷன், குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கிறது. குறைந்தபட்ச ஓய்வூதியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850 கிடைக்கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவை.
ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து பங்களிக்கும் தொகை சந்தையுடன் இணைக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யப்படும். பணி ஓய்வுக்கு பிறகு ஊழியர் ஓய்வூதிய தொகையில் ஒரு பகுதியை மட்டுமே மொத்தமாக பெறலாம். மீதத் தொகைக்கு முதிர்ச்சியின் போது 60% வரி விலக்கு அளிக்கப்படும். மீதமுள்ள 40 சதவீதம் வரிக்கு உட்படும் ஆகிய கெடுபிடிகள் உள்ளதாக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர, விருப்ப ஓய்வு விவகாரத்திலும், 21 வயதில் பணிக்கு வரும் ஒருவர் 25 ஆண்டுகள் பணி செய்திருந்தால்தான், விருப்ப ஓய்வில் செல்ல முடியும். இதன்படி, அவர் தனது 46 வயதில் விருப்ப ஓய்வில் சென்றால், அவருக்கு எப்போது ஓய்வு வயது 60 ஆகிறதோ அப்போதுதான். அதாவது, 14 ஆண்டுகள் கழித்துதான் ‘பே அவுட்’ கிடைக்கும். இதுபோன்ற சிக்கல்களால் தேர்தல் வரும் வேளையிலாவது காரியம் சாதித்துவிடமாட்டோமா என்று போராட்டங்கள் வலுத்து வருகிறது.
தேர்தலில் எதிரொலிக்குமா?
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், பழைய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்வதற்கு குழு அமைத்தது, அறிக்கை தர அந்தக் குழுவுக்கு 9 மாதங்கள் அவகாசம் கொடுத்தது அரசு ஊழியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
அண்மையில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பேசிய பிரதிநிதிகளும் கூட, “அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை தர மறுப்பது எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தின்போதும் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைத்து காலதாமதம் செய்வதை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. நிதி பிரச்சினை என ஏற்கெனவே கூறியதையே மீண்டும் சொல்கின்றனர்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
“காலவரையற்ற போராட்டம் தொடர்பாக டிசம்பர் 27-ம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடத்தப்படும்” ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாஸ்கரன் அறிவித்திருந்தார்.
“தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை உடனடியாக அமல்படுத்தாமல், அதற்கு குழுக்களை அமைப்பது துரோகம். ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அரசு இதேபோன்றுதான் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்லாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியது. போராடுவோரின் உண்மையான பிரச்சினையை புரிந்து கொண்டு தீர்வு காணாமல் திசை திருப்பும் முடிவுகளை அரசு எடுக்குமேயானால் அது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும். அதுவும் தமிழக அரசியல் களத்தில் முன் எப்போதும் இல்லாதது மாதிரியான கூட்டணிக் கணக்குகளும், புதுமுக வருகைகளும், பாஜகவின் விசிபிலிட்டியும், பிரசன்ஸும் அதிகமாகக் காணப்படும் நிலையில் திமுக அரசு ரிஸ்க் எடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதே தேர்தலில் பேக் ஃபயர் ஆகாமல் காத்துக் கொள்ள ஒரே வழி என்கிறார்” அரசியல் பார்வையாளர் ஒருவர்.
இது ஒருபுறம் இருக்க, “தமிழக அரசின் நிதிநிலையை கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைய நிதி நிலவரத்தைக் கொண்டு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை உடனடியாக அமல்படுத்துவது காலுக்கு கீழ் குழி தோண்டும் செயல். வேண்டுமானால், அதற்கான உத்தரவாதம் ஒன்றை வழங்கிவிட்டு அடுத்து ஆட்சி அமையும் பட்சத்தில் படிப்படியாக நிறைவேற்ற முயற்சிக்கலாம். போராட்டக் குழுக்கள் கூட கொள்கை முடிவையாவது முதலில் எடுங்கள் என்றுதான் வலியுறுத்துகின்றன. இப்போது செவிலியர்கள் விவகாரத்தில் பணி நிரந்த ஆணையை 1000+ பேருக்கு இப்போது வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டதுபோல் ஏதேனும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம்” என்று யோசனை கூறுகிறார் சமூக பொருளாதார ஆர்வலர் ஒருவர்.
தேர்தல் காலத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வரிசைகட்டுவதும், அதைவைத்து எதிர்க்கட்சிகள் கல்லாகட்டுவதும் வழக்கமானதே. ஆனால் இப்போதைய தமிழக அரசியல் நிலவரம் வேறு, புதிய களம், புதிய போட்டி நிலவுவதால்,இதற்கு புதுவிதமான அரசியல்தான் எடுபடும் எனத் தெரிகிறது.