கூட்டணி குறித்து சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர், செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம், பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு டிசம்பர் 12-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ஊடகங்களுக்கு நன்றி.
ஊடகங்களை நம்பி தான் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். போராட்டத்தை நீங்கள் தான் பெரிதாக காண்பிக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். கூட்டணி குறித்து சேலம் மாவட்டம் தலைவாசலில் வரும் டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கூட்டணி முடிவை முதலில் ஊடகத்திடம்தான் சொல்வோம். பாமக இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன் தேர்தலில் போட்டியிடுவார்” என்றார்.
இதனிடையே, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பிரிவுக்கு நான்தான் காரணம் என்று வதந்தி பரப்புகின்றனர். நானும், எங்கள் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளும் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்றனர். நல்லது நடக்கும் என்றால், நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என்றார். ஆனால், சேலம் எம்எல்ஏ அருள் கூறுகையில், “ராஜினாமா குறித்த ஜி.கே. மணியின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வாக்களித்த மக்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்றார்.