லக்னோ: 2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் உட்பட நாடு முழுவதும் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறினார்.
தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி, “அனைத்து சிறிய மற்றும் பெரிய தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவதே நமது கட்சிக்கு மிகவும் பொருத்தமானது. எனவே எந்தக் கட்சியுடனும், எந்தவிதமான கூட்டணியிலும் இணையமாட்டோம்.
இதில் எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது. பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடும்.
இருப்பினும், எதிர்காலத்தில் ஏதாவது ஒரு கட்சியால் தனது வாக்குகளை, குறிப்பாக உயர் சாதியினரின் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாற்ற முடியும் என்று நான் முழுமையாக நம்பினால், கூட்டணியில் இணைவது குறித்து ஒரு சாதகமான முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அத்தகைய சூழ்நிலை உருவாக பல ஆண்டுகள் ஆகும்.
2027-ல் மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர உத்தரப் பிரதேச மக்கள் விரும்புகின்றனர். 2027 சட்டப்பேரவை தேர்தலில் முழுப் பெரும்பான்மையுடன் பிஎஸ்பி அரசாங்கம் அமைவதை உறுதிசெய்ய கட்சித் தொண்டர்கள் முழுமையாக பணியாற்றுகின்றனர்.
தற்போதைய ஆட்சியில் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஆனால், பிஎஸ்பி ஆட்சியில் எந்த மதக் கலவரமும் நடக்கவில்லை. யாதவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து, உத்தரப் பிரதேசத்தில் நமது கட்சி ஆட்சியமைக்கும்.
கடந்த தேர்தல்களில் முறைகேடுகளும், நேர்மையற்ற செயல்களும் அதிகளவில் நடந்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான எதிர்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. முந்தைய அரசாங்கங்கள் பிஎஸ்பி நிறுவனர் கன்ஷி ராமைப் புறக்கணித்தன. அவரது மறைவின்போது தேசிய துக்கம்கூட அனுசரிக்கப்படவில்லை” என்று கூறினார்.