திருச்சி: தமிழகத்தில் உள்ள கோயில்களில் நேரடியாகவும், ஊடகங்களுக்குத் தெரியாமலும் ரகசியமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் சீர்திருந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
திருச்சி திருவானைக்காவலில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.ரமேஷ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு கோபுரம் சீரமைப்புப் பணிகளில் தாமதம் நிலவி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். விரைவில் பணிகள் நிறைவடைந்து கிழக்கு கோபுரம் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள கோயில்களில் அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கான வசதிகள், திருப்பணிகள், பராமரிப்பின்றி உள்ள கோயில்கள், சேதமடைந்த மண்டபங்கள், கோபுரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்மிகமும், தமிழும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. இதை கருத்தில் கொண்டு அறநிலையத் துறை சார்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
அனைத்து கோயில்களிலும் விஐபி தரிசன முறையை ஒழுங்குபடுத்துவது, ரங்கம் யாத்ரி நிவாஸுக்கென அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ரங்கம் கோயிலில் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நேரடியாகவும், ஊடகங்களுக்குத் தெரியாமல் ரகசியமாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் அறநிலையத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்
மேற்கொள்ளப்படும்.இது குறித்து படிப்படியாக அறிவிக்கப்படும். பக்தர்களின் வசதிக்கு தேவையான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.