தமிழகம்

காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: ‘காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்கும் நோக்கில் அதற்கான ‘காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு’ சிறப்பு திட்டம் 7 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்’ என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

• நீண்ட இலை பருத்தி சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றை ஊக்குவிக்க பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் ஐந்தாண்டு திட்டமாக செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் 27 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில், 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

• மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் 36 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

• 17 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் நாற்றங்கால்கள் அமைத்து தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

• தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் 12,500 ஏக்கர் பரப்பிலான சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலங்கள் மீட்கப்பட்டு தேக்கு, மகோகனி, சந்தனம், மலைவேம்பு, செம்மரம் உள்ளிட்ட பொருளாதாரம் மதிப்புமிக்க மரக்கன்றுகள் ஒரு ஏக்கருக்கு 200 கன்றுகள் வீதம் நடவு செய்து வேளாண் காடுகள் உருவாக்கப்படும்.

• அரசு விதை பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் நிலங்களில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய்வித்துகள், பருத்தி போன்ற பயிர்களுக்கு விதைப்பண்ணைகள் அமைத்து, 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விதைகளை கொள்முதல் செய்து 10 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்கும் நோக்கில் அதற்கான சிறப்பு திட்டம் 7 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

• சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ள இடங்களை காட்டுப்பன்றிகள் தங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளன. எனவே அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற 4 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

• காட்டுப்பன்றிகள் மட்டுமல்லாது காட்டெருமை, யானை, மான் போன்ற பிற வனவிலங்குகளாலும் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுத்திட நடப்பாண்டில் 134 விவசாயிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் மின்வேலி அமைப்புகள் மானியத்தில் நிறுவப்படும்.

• தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கிய சுற்றுச்சூழலுக்கு உகந்த திரவ வடிவிலான காட்டுப்பன்றி விரட்டி விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும். இத்திட்டம் 14,000 ஏக்கரில், ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

SCROLL FOR NEXT