சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சேப்பாக்கத்தில் மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மழையின்றி வறண்டு காணப்பட்டது.
இதன் காரணமாக கடந்த இரு வாரங்களாக மாநகர், புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் ஒவ்வாமையால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், சளித்தொல்லை போன்றவற்றால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. பின்னர் பிற்பகல் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் லேசான மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வந்த மழை, இரவில் பரவலாக மிதமான மழை பெய்தது.
மழையால் தியாகராயநகர், கிண்டி, அண்ணா சாலை, வேளச்சேரி, அடையாறு, வால்டாக்ஸ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கடந்த ஒரு வாரமாக சென்னை, புறநகரில் கடும் காற்று மாசு நிலவியது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவான காற்றுத்தரக் குறியீடு 100-ஐ கடந்து 200-க்கு மேல் பதிவானது.
கடந்த வாரத்தில் இதர 5 நாட்களில் 100-க்கு மேல் பதிவாகி காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், காற்றின் தரம் 100-க்கு கீழ் 75 ஆக திருப்திகர நிலைக்குக் குறைந்தது.
9 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலிலிருந்து மத்தியமேற்கு வங்கக்கடல் வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
வடக்கு கேரளாவிலிருந்து கர்நாடகா வரை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.