அமைச்சர் விக்னேஷ்| கோப்புப் படம்

 
தமிழகம்

மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்வா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

வெற்றி மயிலோன்

கோவை: “மது பாட்டில்களின் ரூ.140 விலையுடன், பாட்டிலை திரும்பத் தருவதற்கான ரூ.10 தொகையும் சேர்த்து எம்ஆர்பியிலேயே ரூ.150 என வந்துவிடும். இனி பாட்டில்களை திரும்பக் கொடுத்துவிட்டு ரூ.10 பெற்றுக் கொள்ளலாம். திரும்ப வராத பாட்டில்களின் தொகை அரசுக்கு சென்றுவிடும். முன்பு என்ன விலையோ அதே விலைக்குத்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறது, விலையேற்றம் ஏதுமில்லை” என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலின் விலை ரூ.140 என வைத்துக் கொள்வோம். அதனை திருப்பித் தருவதற்காக கூடுதலாக ரூ.10 வாங்கினார்கள். மேலும் கட்சி நிதி என்ற பெயரில் ரூ.10 வாங்கினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கட்சி நிதியாக ரூ.10 வாங்குவதை ஒழித்தோம். அதன் பின்னர் ரூ.140 மற்றும் பாட்டிலுக்கு ரூ.10 என ரூ.150 வாங்குகிறார்கள். இதில் பாட்டிலை திரும்பக் கொடுக்கும்போது மீண்டும் ரூ.10 வழங்கப்படும்.

இதில் என்னவென்றால், 100 பாட்டில்கள் விற்பனையானால், அதில் 50 பாட்டில்கள் மட்டுமே திரும்ப வருகிறது. ஆனால், 99 சதவீத பாட்டில்கள் வந்துவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள். இந்தப் பணம் யாருக்கோ செல்கிறது. இதுவே, செந்தில் பாலாஜியாகவோ அல்லது வேறு யாராகவோ இருந்திருந்தால், இந்தப் பணம் அவர்களுக்கு போயிருக்கும். நாங்கள் மக்கள் பணம் மக்களுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறோம். இல்லையென்றால் ஏன் இவ்வளவு போராட்டம் நடக்கவிட வேண்டும். நேற்றிலிருந்து டாஸ்மாக் தான் பெரிய பிரச்சினை போன்று எல்லோரும் அதனையே லைவ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக்கில் பாட்டில்களை திரும்ப வாங்கும்போது, இத்தனை பாட்டில்களை திரும்பப் பெற்றேன் என ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். இந்த பாட்டில் விஷயத்தில் கூடுதலாக கணக்கு காட்டி மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இப்போது 50 - 55 சதவீத பாட்டில்கள் தான் வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப வருகிறது, ஆனால் கூடுதலாக வருவதாக கணக்கு காட்டி ஊழல் செய்கிறார்கள்.

இதனால் தான் இனி பாட்டில்களின் ரூ.140 விலையுடன், பாட்டிலை திரும்பத் தருவதற்கான ரூ.10 தொகையும் சேர்த்து எம்ஆர்பியிலேயே ரூ.150என வந்துவிடும். இனி பாட்டில்களை திரும்ப கொடுத்துவிட்டு ரூ.10 பெற்றுக் கொள்ளலாம். திரும்ப வராத பாட்டில்களின் தொகை அரசுக்கு சென்றுவிடும். முன்பு என்ன விலையோ அதே விலைக்குத்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறது, விலை ஏறவில்லை. பாட்டிலை திரும்பத் தந்தால் கொடுக்கப்படும் ரூ.10-ஐ எம்ஆர்பியில் சேர்த்துள்ளோம்.

பாட்டில்களை திரும்பப் பெறும் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், தமிழகத்தில் எந்த ஊரில் வாங்கிய பாட்டிலையும் எங்கும் செலுத்தி பணம் பெறலாம். பாட்டில்கள் இனி சாலையில் எங்கும் கிடந்தால் அதனை எடுத்து ரூ.10 பெற்றுக் கொள்வார்கள், இது பலருக்கு வாழ்வாதாரமாகும். சுற்றுச்சூழலும் காக்கப்படும். இது புரியாமல் சிலர் விமர்சனம் செய்வது கஷ்டமாக உள்ளது” என்றார்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT