தமிழகம்

நீதிபதி பேசிய பிறகும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

மோகன் கணபதி

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி பொதுநிகழ்ச்சியில் வருத்தத்துடன் பதிவிட்ட பிறகும் முதல்வர் விஜய் இன்னும் எதற்காக மவுனம் காக்கிறார் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, மாநிலக் காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி பொதுநிகழ்ச்சி ஒன்றில் வருத்தத்துடன் தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தனக்கு எதிராகவோ, தனது தலைமையிலான தற்குறித்தனமான அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்டியோ, நியாயமான விமர்சனங்களை முன்வைத்து யாராவது கேள்வி எழுப்பினால் திரைப்படங்களில் பறந்து பறந்து எதிரிகளைத் தாக்கும் கதாநாயகனைப் போலக் காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்தி, உடனடியாகக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல்வர் விஜய், தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்துள்ள இத்தகைய கடுமையான குற்றச்சாட்டு தொடர்பாக மட்டும் பல வாரங்களாகப் பொட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பது ஏன்?

அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதில் காட்டும் அதே வேகத்தையும், சட்டத்தை நிலைநாட்டுவதில் காட்ட வேண்டிய அதே உறுதியையும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான புகார்களிலும் முதல்வர் காட்ட வேண்டாமா? ஆட்சியாளர்களுக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நீதி என்பதுதான் தவெக அரசின் நிர்வாக அணுகுமுறையா?

பெண்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, காவல்துறையின் சுதந்திரமான செயல்பாடு என மேடைகளில் முழங்குவதால் மட்டும் நல்லாட்சி மலர்ந்துவிடுமா? சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறையே, ஒரு பெண் ஆட்சியர் சம்பந்தப்பட்டுள்ள புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம், ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் என்றால் காவல்துறையின் அணுகுமுறை மாறிவிடுமா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கொள்கை இங்கே பின்பற்றப்படுகிறதா? தமிழகத்தில் பெண் உயரதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானியப் பெண்களுக்கான பாதுகாப்பு என்னவாகும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.

தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த தமிழக முதல்வர் விஜய்யின் அலட்சியத்தால்தான் தேசிய மகளிர் ஆணையமே தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து தமிழகக் காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நீதிபதி ஒருவரும் பொதுநிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியிருப்பது, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

எனவே, தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக எழுந்துள்ள இந்தப் புகாரின் தீவிரத்தையும், காவல்துறையின் நடவடிக்கையின்மையையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இவ்விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT