தமிழகம்

அனைவருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும்போது ஏன் தனித் தனி மயானங்கள்? - ஐகோர்ட் கேள்வி

செய்திப்பிரிவு

மதுரை: அனைத்து சமூகத்தினருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும்போது மயானங்கள் மட்டும் ஏன் தனித்தனியாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் கீழாரியாகுளத்தைச் சேர்ந்த செல்லப்பா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: கீழாரியாகுளத்தில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்துக்கு போதிய சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை.

உயிரிழந்தவர்களின் உடல்களை தனியாருக்கு சொந்தமான ஏராளமான விவசாய நிலங்கள் வழியாகவே மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அறுவடை காலங்களில் பயிர்கள் சேதமடைவதாக உடல்களை எடுத்துச் செல்ல நில உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘அனைத்து சமூகத்தினருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும் போது, மயானங்கள் மட்டும் ஏன் வெவ்வேறாக உள்ளன?

தமிழகத்தில் மயானங்கள் பொது மயானங்களாக உள்ளதா? அல்லது சாதிய அடிப்படையில் மயானங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT