சென்னை: கடந்த 1793-ல் தொடங்கிய நிலவரி வசூல் முறை ரத்துக்கு நில வருவாய் முறையை எளிமைப்படுத்துவதே காரணம் என வருவாய்த்துறை துறை செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் காலத்து நில வரி வசூல் முறை ஜூலை 1 முதல் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆக.18-ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த நிலவரி வசூல் ரத்துக்கான காரணம் குறித்து வருவாய்த்துறை செயலர் பழனிசாமி கூறியதாவது: நிலம், மனித சமுதாயத்தின் நாகரிக பரிணாம வளர்ச்சியில் தொடங்கி ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக திகழ்ந்து வந்துள்ளது. நிலத்தின் மீது விதிக்கப்படும் நிலவரி மற்றும் அதை வசூலிக்கும் முறையானது மன்னராட்சி காலத்திலிருந்து தற்போது வரை அரசின் முக்கிய நிர்வாகப் பணியாகவும், வருவாயாகவும் இருந்து வருகிறது.
இந்தியாவில் அரசர் ஷெர்ஷா சூரியின் காலத்தில் நிள அளவை முறையில் தொடங்கிய நில நிர்வாகம், முகலாய அரசர் அக்பர் காலத்தில் வட இந்தியா முழுவதும் முறைபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சியின்போது, தலைமை ஆளுநராக இருந்த கார்ன்வாலிஸ் என்பவரால் 1793-ல் நிலையான நிலவரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஜமீன்தார் வாயிலாக வசூலிக்கப்பட்டது.
கடந்த 1820-ல் மெட்ராஸ் மாகாண ஆளுநர் தாமஸ் மன்றோ என்பவரால் ‘இரயத்துவாரி முறை’ அமல்படுத்தப்பட்டு, நிலத்தினை உழுது, பயிரிடுபவரிடம் இருந்து நேரடியாக வரி வசூல் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
நில வருவாய் என்பது, நிலத்தினை உழுது, பயிரிடும் அனைத்து நில உடமையாளர்களும், ரயத்துகளும் ஜுலை-1 முதல் ஜூன் 30 வரையிலான ஒவ்வொரு பசலி ஆண்டுக்கு அரசுக்கு செலுத்தும் வரித்தொகை ஆகும். ரயத்துவாரி முறையின்கீழ், ரயத்திடமுள்ள ஒவ்வொரு நிலமும் முழுமையாக அளவை செய்யப்பட்டு, நிலத்தின் தன்மை மண், தரம், பாசன ஆதாரம் மற்றும் விளைச்சல் ஆகியவற்றின் அடிப்படையில் ‘தீர்வை’ நிர்ணயம் செய்யப்பட்டு, அதனடிப்படையில், நிலவரி வசூலிக்கப்பட்டு வந்தது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர், ரயத்துவாரி சட்டம், இனாம் ஒழிப்பு தொடர்பான பல்வேறு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, நில உடமையாளர்களிடம் இருந்து மண்ணின் தரம் மற்றும் பாசன ஆதாரங்களின் அடிப்படையில் வரி நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 2009-10-ம் நிதிஆண்டில் நிலவரி விதிப்பு முறையை எளிமை படுத்தவும், கிராம கணக்குகள் மற்றும் பதிவேடுகளில் உரிய மாற்றங்கள் செய்யவும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) முறையினை சீரமைக்கவும் நிலவரி சீர்திருத்த குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 2010-ல் தமிழகத்தில் உள்ள நிலங்களுக்கு அவற்றின் வகைபாட்டுக்கு ஏற்ப நிலவரி தொகையானது புஞ்சை நிலத்துக்கு எக்டேருக்கு ரூ.5 என்ற வீதத்திலும், நஞ்சை நிலத்துக்கு எக்டேருக்கு ரூ.12 என்ற வீதத்திலும் நிர்ணயம் செய்தும் தலவரி, தலமேல்வரி, பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி, கூடுதல் தண்ணீர் வரி மற்றும் பாசன மேம்பாட்டு வரி போன்ற மேல் வரிகளை நீக்கம் செய்தும் ஆணையிடப்பட்டது.
நில வருவாய் முறையை எளிமைப்படுத்துவதற்கு முன்னர் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் மற்றும் பல்வேறு காரணங்களால் பல பசலி ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலவரி தொகையினை நில உரிமையாளர்களிடம் இருந்து வசூல் செய்வதில் அதிக சிரமங்கள் உள்ளதாலும், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நலன் கருதியும் 1436-ம் பசலி ஆண்டு முதல் நிலவரி வசூல் நடைமுறையினை ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.