புதுச்சேரி: ‘ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு எந்தக் கருத்தையும் சொல்லாமல் ஏன் மவுனமாக இருக்கிறார்’ என்று ராகுல் காந்திக்கு புதுச்சேரி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் போராடிய மாணவர்கள் மீது பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்று ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசு தாக்கியுள்ளது. இதனை வன்மையாக பாஜக கண்டிக்கிறது.
நீட் தேர்வில் தவறுகள் நடந்தது தெரிந்ததும் மத்திய பாஜக அரசு அந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வுக்கு உத்தரவிட்டது. மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடந்தபோது கடுமையான சட்டத்தையும் மத்தியில் உள்ள பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
டெல்லி போராட்டத்துக்கு குரல் கொடுத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் நலனுக்காக பாடுப்படுவதாக சொல்லிக் கொள்ளும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இப்போது ஜார்க்கண்டில் நடந்த போராட்டத்துக்கு எந்தக் கருத்தையும் சொல்லாமல் மவுனமாக காப்பது ஏன்?
இதற்கு மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவர், பதில் சொல்லியே ஆக வேண்டும். ராகுல் காந்தி சுய லாப அரசியல் மட்டுமே செய்ய விரும்புகிறார்.
காங்கிரஸ் தொடர் போராட்டங்களை நடத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திர தினம் கொண்டாடும் இந்த வேளையில் இதுபோன்ற பிரச்சினைகளை உண்டாக்கி மேலிட காங்கிரஸ் தலைவர் மட்டுமின்றி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் தலைவரும் தவறான தகவலை மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. அதை மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு செம்மைப்படுத்தியுள்ளது. அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்தியில் உள்ள பாஜக அரசு எடுக்கவில்லை.
மாறாக, எந்தக் காரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்படுகிறது என்பதையும், இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தவும் வழிவகை செய்யும் சட்டத்தை தான் மத்தியில் உள்ள பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்தியில் கடந்த 13 ஆண்டுகளாக எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நம் நாட்டை 4-வது இடத்துக்குக் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.
மேலும், வளைக்குடா போரின் காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்தியாவில் இந்தப் பிரச்னை எழாமல் பாதுகாத்து வருபவர் பிரதமர் மோடிதான். மேலும், உலக நாடுகளில் இணக்கமான தலைவராகவும், அமைதியை விரும்பும் தலைவராகவும் மோடி அறியப்படுகிறார்” என்று வி.பி.ராமலிங்கள் தெரிவித்தார்.