திமுக - காங்கிரஸ் இடையே கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு மல்லுக்கட்டு ஒருவழியாக அண்மையில் முடிவுக்கு வந்த நிலையில், ராகுல் காந்தியை தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக அடுத்தகட்ட சர்ச்சை ஓட ஆரம்பித்திருக்கிறது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸுக்கு 28 தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா சீட்டையும் திமுக ஒதுக்கியது. ஆனால், குறைந்தபட்சம் 35 தொகுதிகளை எதிர்பார்த்த ராகுல் காந்திக்கு இந்த உடன்படிக்கையில் அறவே உடன்பாடு இல்லை. என்றாலும் ப.சிதம்பரத்தை உள்ளே கொண்டு வந்து திமுக சங்கடப்படாத வகையில் பேச்சுவார்த்தையை முடித்தார் செல்வப்பெருந்தகை. தன்னால் சிபாரிசு செய்யப்பட்ட வேட்பாளர்கள் சிலருக்கு தொகுதி கிடைக்காமல் போனதிலும் ராகுலுக்கு செல்வப்பெருந்தகை மீது வருத்தம் என்கிறார்கள். இதையடுத்து, அவரை டெல்லிக்கே வரவழைத்துப் பேசிய ராகுல் காந்தி, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும் அவரிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டார் எனவும் செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதனால் தான், “தேர்தல் முடிந்ததும் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்” என செல்வப்பெருந்தகை தாமாக முன்வந்து அறிவித்ததாகவும் சொல்கிறார்கள். இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால் தான் தமிழக தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவது குறித்து ராகுல் காந்தி இன்னமும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், “புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலினும் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அதனால் ராகுலும் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக திமுக தரப்பில் இருந்து கேட்டார்கள். ஆனால், "கேரளா பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டி இருப்பதால் நேரமில்லை" என ராகுல் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், ராகுல் புதுச்சேரி பிரச்சாரத்துக்கு வந்த நாளில், ‘தவெக-வை குறைத்து மதிப்பிட முடியாது. திமுக கூட்டணியில் நாங்கள் கூடுதல் இடங்களைப் பெற முயற்சித்தோம். ஒரு பக்கம், ஒரு சின்ன தோசையைக் கொடுத்துப் பங்கு போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். மற்றொருபுறம், கல்யாண விருந்தே வைத்து அழைத்தார்கள். நாங்கள் அனுமார் மாதிரி; எங்கள் பலம் எங்களுக்கே தெரியாது’ என ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்டார்.
அத்துடன், ‘காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டதால் தான் விஜய்யை சந்தித்துப் பேசினேன்’ என்றும் அவர் பேட்டியளித்தார். இதெல்லாம் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியது. அதேசமயம், புதுச்சேரி பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்களை ராகுல் மேடை ஏற்றாத நிலையிலும் ஸ்டாலின் தனது பிரச்சார மேடையில் காங்கிரஸ் வேட்பாளர்களையும் உட்காரவைத்தார்.
இதையடுத்து ஏப்ரல் 9-ம் தேதி ஸ்டாலினுடன் ராகுல் கூட்டாக பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு ராகுலிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கும் பதில் வரவில்லை. விஜய்யின் வருகையால் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறிவிடுமோ எனப் பதறும் திமுக, அந்த வாக்குகளை தக்கவைக்க ராகுல் காந்தியின் பிரச்சாரம் அவசியம் என நம்புகிறது. அதனால் சென்னை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் - ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம் செய்யவேண்டும் என திமுக விரும்புகிறது.
அதுமட்டுமல்லாது, தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் சரி செய்து இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் ஜெல்லாக வேண்டுமானால் அதற்கு ராகுலும் ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் செய்வதும் முக்கியம். அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கெனவே பிரச்சாரம் செய்துவிட்ட நிலையில், மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார். அமித் ஷா மற்றும் 6 மாநில முதல்வர்களும் பிரச்சாரத்திற்கு
வரும் நிலையில் ராகுலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என திமுக கூட்டணித் தலைவர்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பாக ராகுலிடம் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்” என்றனர்.
திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் தனக்கு திருப்தி இல்லாத காரணத்தால், “முடிந்தால் திமுக தயவில் நீங்களே ஜெயித்து வாருங்கள்” என ராகுல் காந்தி தமிழக காங்கிரஸாரை கைகழுவி விட்டார் என்று வரும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை ராகுல் - ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம் மட்டுமே உறுதி செய்யும்.