சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு ரூ.680 கோடி செலவிட்டு நிலங்களை கையகப்படுத்திய பிறகு பாதியில் கைவிட்டது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளர், பதிப்பாளரான ஜி.கவுதமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க புதிதாக பரந்தூரில் ரூ.27,400 கோடி செலவில் பசுமை விமான நிலையம் அமைக்க முந்தைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. 5 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 1,700 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.680 கோடி செலவிட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இத்திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். ஏற்கெனவே எடுக்கப்பட்ட நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், எந்த ஒரு தொழில்நுட்ப விவரங்களோ, புள்ளி விவரங்களோ, நிபுணர் குழு அறிக்கையோ பெறாமல் திட்டத்தை கைவிடுவது மாநில வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், தொழில் வளர்ச்சி, போக்குவரத்து வசதிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.
எனவே, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவது தொடர்பான செய்திக்குறிப்பு, சுற்றறிக்கையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே எடுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்கக் கூடாது எனவும், பரந்தூர் திட்டத்தை கைவிடும் முடிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் அறிவித்து அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி சேஷாத்ரி வாதிடும்போது, முந்தைய ஆட்சியில் சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்க 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ரூ.680 கோடி செலவிட்டு, 1,700 ஏக்கர் நிலங்களை எடுத்து, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும் கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், திட்டம் சரிவராது என தற்போதைய தமிழக அரசு பாதியில் கைவிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றார்.
அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், விமானப் போக்குவரத்து அமைச்சகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ரமணமூர்த்தி, விமானப் போக்குவரத்து ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் மெய்யப்பன் ஆகியோரை நோக்கி இவ்வளவு பெரிய தொகை செலவிட்டு நிலம் எடுத்தபிறகு பாதியில் கைவிட்டது ஏன் தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தாமலா அப்பகுதி தேர்வு செய்யப்பட்டது, தற்போது திடீரென அந்த திட்டம் சாத்தியமில்லாமல் போனது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, தேர்வு செய்யப்பட்ட பகுதியில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் அதிகம் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது சிக்கலானது என்பதால் திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்தது. மேலும் இது அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இதற்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து, தமிழக அரசு, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட தரப்புகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.