சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் பணியிடங்களை நிரப்பியதில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்காதது ஏன் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நிரப்பப்பட்டுள்ள 2,538 பணியிடங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை நிர்ணயம் செய்து ரூ.1,020 கோடி வரை லஞ்சம் வாங்கி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
முன்னதாக இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தது.
மேலும் அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அதிமுக எம்.பி. இன்பதுரை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை இயக்குநர் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை நிறைவு செய்ய 180 நாட்கள் அவகாசம் உள்ளது.
இந்நிலையில், நேரடியாக யார் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடியாது. இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஆதிநாராயணன் மீது 6 கொலை, கொலை முயற்சி உள்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்றொரு மனுதாரரான இன்பதுரை, அதிமுக எம்.பி.தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’’ என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அரசியல்வாதிகள் என்றால் வழக்கு தொடரக்கூடாது என உள்ளதா மற்றொரு மனுதாரர் மீது கொலை வழக்குகள் இருந்தால் அதுதொடர்பாக அவர் விளக்கம் அளிக்கட்டும்’’ என்றனர்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘‘இந்த விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு கடிதம் மட்டும் அனுப்பவில்லை. அனைத்து ஆதாரங்களையும் அனுப்பி வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை நடத்தாமல், நேரடியாகவே யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம். ஆனால், தமிழக போலீஸார் அதைச் செய்யவில்லை’’ என வாதிட்டார்.
டிஜிபி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் கபூர் சவுத்ரி, ‘‘இந்த வழக்கை தொடர மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. இருவரின் நோக்கத்தையும், நம்பகத்தன்மையையும் ஆராய வேண்டியுள்ளது. எந்த வழக்குக்காக நடத்தப்பட்ட சோதனையில் ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை கூறுகிறதோ, அந்த வழக்கே தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது டிஜிபி இந்நேரம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். டிஜிபி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என கேள்வி எழுப்பினர்.
பின்னர், அதிமுக எம்.பி. இன்பதுரை தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும், டிஜிபியும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல, மற்றொரு மனுதாரரான ஆதிநாராயணன் அரசு தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்.4-க்கு தள்ளிவைத்தார்.