திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற மினி டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு.

 
தமிழகம்

“திமுக - காங். கூட்டணி மீது தினகரனுக்கு கவலை ஏன்?” - அப்பாவு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: "காங்கிரஸுடன் திமுக கூட்டணி சேருமா என்ற கவலை, டிடிவி தினகரனுக்கு எதற்கு ஏற்பட்டுள்ளது?" என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கேள்வி எழுப்பினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய நியோ மினி டைடல் பார்க், வடக்கு புறவழிச்சாலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தாமிரபரணி ஆற்றின் மீது ரூ.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாலம், சேரன்மகாதேவி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், கோபாலசமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரையிலான சாலை என்று ரூ.243 கோடி மதிப்பிலான திட்டங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

          

இதைத் தொடர்ந்து திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற மினி டைடல் பார்க் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச் சாலை திட்டத்தின் பணிகளில் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை கொங்கன்தான்பாறை தொடங்கி சுத்தமல்லி வரை முதல் கட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. எந்தப் பணியையும் அரசு கிடப்பில் போடவில்லை. அறிவித்த 4 ஆண்டுகளுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவேற்றி வருகிறது.

கடந்த ஆட்சியாளர்கள் தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டப் பணியை கிடப்பில் போட்டனர். ஆனால் அந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடித்து மக்களது பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குகளை தூசி தட்ட வேண்டும் என்றால் சகாரா டைரி குறிப்புகளில் உள்ளவர்களின் வழக்குகளையும் தூசி தட்ட வேண்டும்.

கடந்த 2011-2012-ம் ஆண்டு காலகட்டத்தில் சகாரா வழக்கில் சம்பந்தப்பட்ட தற்போதைய பிரதமர் மோடி, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்தபோது ரூ.25 கோடியை 4 தவணைகளாக சகாரா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இந்த தகவல் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதே நிலையில்தான் தற்போதைய நகராட்சி நிர்வாக துறை அமைச்சரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலும் உள்ளது. அமலாக்கத் துறை ஊழல் பிரச்சனையை தூசி தட்டி பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி சப்ளை செய்வதில் ஊழல் நடந்துள்ளதாக சிஐஜி அறிக்கையில் உள்ளது. ரூ.826 கோடி தமிழ்நாடு மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை பிரதமரின் நண்பர் அதானி மீது வழக்கு தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, அதானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சகாரா ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களில் நடந்த முறைகேடுகளை உறுதி செய்து ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு கோப்பில் கூட ஆளுநர் கையெழுத்து இடவில்லை. ஒரு வழக்கு தொடர்பாக கூட விசாரிக்க அனுமதி வழங்கவில்லை.

காங்கிரஸுடன் திமுக கூட்டணி சேருமா என்ற கவலை டிடிவி தினகரனுக்கு எதற்கு ஏற்பட்டுள்ளது? எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். டிடிவி தினகரன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. திமுக பூஜ்ஜியம், அதிமுக ராஜ்யத்தை பிடிக்கும் என பழனிசாமி கூறியது அவரின் ஆசையாக இருக்கலாம்” என்றார் அப்பாவு.

SCROLL FOR NEXT