தமிழகம்

மக்களவைத் தலைவர் தேநீர் விருந்தில் பங்கேற்றது ஏன்? - கனிமொழி எம்.பி பதில்

செய்திப்பிரிவு

சென்னை: ‘இண்டியா கூட்டணியில் திமுக இல்லை’ என்று கனிமொழி எம்.பி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததால், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று இரவு வந்தார். இந்நிலையில், இன்று காலை 8.15 மணிக்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, விமான நிலையத்தில் கனிமொழியிடம், ‘டெல்லியில் மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் திமுக சார்பில் நீங்கள் பங்கேற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, ‘இதில் சர்ச்சை ஆவதற்கு என்ன இருக்கிறது? நாடாளுமன்றத்தில், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை மாற்றித்தர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் ஏற்கெனவே கேட்டிருந்தோம். அது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசுவதற்காகவே அங்கு சென்றோம்’ என்று கனிமொழி தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், நீங்கள் பங்கேற்றது ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘இண்டியா கூட்டணியில் தற்போது காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது. நாங்கள் இல்லை’ என்று கனிமொழி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT