புதுக்கோட்டை: விராலிமலையில் மலை மீதுள்ள முருகன் கோயில், சித்தன்னவாசல், குடுமியான்மலை சிகாகிரீஸ்வரர் கோயில், கொடும்பாளூர் மூவர் கோயில், ஆவூர் பெரியநாயகி அன்னை ஆலயம், குடுமியான்மலை வேளாண் பண்ணை உள்ளிட்டவை முக்கியத்துவம் பெற்ற அடையாளங்களை கொண்டுள்ள தொகுதி விராலிமலை.
இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சிகளும், விராலிமலை ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி தவிர மற்ற ஊராட்சிகளும், அன்னவாசல், குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் சில ஊராட்சிகளும் விராலிமலை தொகுதிக்குள் வருகின்றன. முக்குலத்தோர், பட்டியலினத்தவர், முத்தரையர், முஸ்லிம்கள்ர், ஊராளிக் கவுண்டர், இசை வேளாளர் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை குளத்தூர் தொகுதியுடன் இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011-ல் நடைபெற்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து 2021 வரை நடைபெற்ற 3 தேர்தல்களிலும் அதிமுகவைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 1.02 லட்சம் வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து திமுக சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட எம்.பழனியப்பன் 78,521 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல, நாதக வேட்பாளர் அழகு மீனா 7,035 வாக்குகளும், அமமுக வேட்பாளர் ஓ.கார்த்திக் பிரபாகரன் 1,228 வாக்குகளும் பெற்றனர்.
இந்த முறை திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டின், அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ விஜயபாஸ்கர், நாதக சார்பில் சத்திய லட்சுமி, தவெக சார்பில் முருகேசன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இதில், திமுக சார்பில் கே.கே.செல்லப்பாண்டியன் முதன்முறையாக பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இவர் புதுக்கோட்டை தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில், இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அதிமுக வேட்பாளர் சி.விஜய பாஸ்கரை வீழ்த்தும் நோக்கில் இவரை விராலிமலை தொகுதியில் கட்சித் தலைமை களம் இறக்கி உள்ளது.
விஜயபாஸ்கர் மீது ஊழல், முறைகேடு புகார் இருப்பதாகக் கூறியும், திமுக அரசின் நலத்திட்டங்கள், வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு பக்க பலமாக அவரது மனைவியும் தேர்தல் களத்தில் இறங்கி ஆதரவு திரட்டி வருகிறார்.
மேலும், புதுக்கோட்டையில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அண்மையில் வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள விஜயபாஸ்கர் ஊருக்கே சென்று ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். அதிமுக சார்பில் 4-வது முறையாக போட்டியிடும் விஜயபாஸ்கர் இதுவரை இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், எப்போதும் தன்னை எளிமையாக அணுக முடியும் என்பதை மக்களிடம் எடுத்துக் கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார்.
இவருக்கு ஆதரவாக மனைவி, 2 மகள்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அத்துடன், தவெக முருகேசன், நாதக சத்தியலட்சுமி ஆகியோர் இளம் படையுடன் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஆனால், இங்கு எப்படியும் வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், தொகுதியை 4-வது முறையாக கைப்பற்றி சாதனை படைக்கும் நோக்கில் அதிமுகவும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. இந்த தொகுதியின் தேர்தல் முடிவை விராலிமலை மட்டுமின்றி தமிழகமே எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்
* விராலிமலையில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்
* சதிராட்டக் கலைக்கு பிரசித்தி பெற்ற இந்தப் பகுதியில் இசைக் கல்லூரி தொடங்க வேண்டும்.
* விராலிமலையில் தீயணைப்பு நிலையம் தொடங்க வேண்டும்.
* கைவிடப்பட்ட குவாரிகளை பாதுகாக்க வேண்டும்.
* காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
* தினசரி காவிரி குடிநீர் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1967 விஎஸ்.சண்முகம் - திமுக
1971 வீ.சா.இளஞ்செழியன் - திமுக
2011 சி.விஜயபாஸ்கர் - அதிமுக
2016 சி.விஜயபாஸ்கர் - அதிமுக
2021 சி.விஜயபாஸ்கர் - அதிமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,10,937
பெண்கள் - 1,14,188
மூன்றாம் பாலினத்தவர் - 34
மொத்தம் 2,25,159