திருச்சி 2-வது தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு ‘திருச்சி மேற்கு’ என பெயர் மாற்றப்பட்டது. இந்தத் தொகுதியில் இதுவரை 15 பொதுத் தேர்தல்கள், 2 இடைத்தேர்தல்கள் (திமுக எம்எல்ஏவாக இருந்த அன்பில் பொய்யாமொழி மறைவுக்கு பிறகு 2000-லும், அதிமுக அமைச்சராக இருந்த மரியம் பிச்சை மறைவுக்கு பிறகு 2011-லும்) நடைபெற்றுள்ளன.
இதில், ஒரு இடைத்தேர்தல் உள்ளிட்ட 9 தேர்தல்களில் திமுகவும், ஒரு இடைத்தேர்தல் உள்ளிட்ட 6 தேர்தல்களில் அதிமுகவும், 2 பொதுத் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில் வெற்றி பெற்ற 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு, அதிமுக வேட்பாளர் பத்மநாதனை 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கே.என்.நேருவுக்கு 1,18,133 வாக்குகளும், பத்மநாதனுக்கு 33,024 வாக்குகளும் கிடைத்தன. இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேரு 6-வது முறையாக (ஒரு இடைத்தேர்தல் உட்பட) போட்டியிடுகிறார். இதில் 3 முறை வென்றார்.
இதேபோல, அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.ராஜசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேஸ்வரி, தவெக சார்பில் ஜி.ராமமூர்த்தி ஆகியோர் களம் காண்கின்றனர். இந்தத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான அமைச்சர் நேரு தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
நேற்று அவருக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார். இவர் தனது பதவி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய திட்டங்களையும், தற்போது பணிகள் நடைபெற்று வரும் டைடல் பார்க், பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி, பஞ்சப்பூர்- கருமண்டபம்- உறையூர் புதிய வழித்தடம் ஆகிய திட்டங்களையும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
அமமுக எம்.ராஜசேகரன் தனது பிரச்சாரத்தில், இந்த தொகுதியின் எம்எல்ஏ நேரு அமைச்சராக இருந்தும் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டி வருவதுடன், தமிழகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம், ஊழலுக்கு முடிவுகட்ட எங்களை ஆதரியுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
இதேபோல, தவெக வேட்பாளர் ராமமூர்த்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொகுதியில் தொடர்ந்து3-வது முறையாக வெற்றி பெறும்முனைப்பில் திமுக வேட்பாளர் கே.என்.நேருவும், கைப்பற்றியே தீருவது என்ற முயற்சியில் அமமுக வேட்பாளர் ராஜசேகரனும், வெற்றி பெற்று புதிய வரலாறு படைப்பது என தவெக, நாதக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை வென்றவர்கள்
திருச்சி-2 தொகுதி
1957 - எம்.கல்யாணசுந்தரம் - இந்திய கம்யூ.
1962 - எம்.கல்யாணசுந்தரம் - இந்திய கம்யூ.
1967 - ஆர்.நாகநாதன் - திமுக
1971 - அன்பில் தர்மலிங்கம் - திமுக
1977 - கே.சவுந்தரராஜன் - அதிமுக
1980 - கே.சவுந்தரராஜன் - அதிமுக
1984 - ந.நல்லுசாமி - அதிமுக
1989 - அன்பில் பொய்யாமொழி - திமுக
1991 - ஜி.ஆர்.மாலா - அதிமுக
1996 - அன்பில் பொய்யாமொழி - திமுக
2000 - (இடைத்தேர்தல்) அன்பில் பெரியசாமி - திமுக
2001 - அன்பில் பெரியசாமி - திமுக
2006 - கே.என்.நேரு - திமுக
திருச்சி மேற்கு தொகுதி
2011 - என்.மரியம்பிச்சை - அதிமுக
2011 - (இடைத்தேர்தல்) - மு.பரஞ்சோதி - அதிமுக
2016 - கே.என்.நேரு - திமுக
2021 - கே.என்.நேரு - திமுக
தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு
3 ஆண்டுகளாகியும் முடிவடையாத கோட்டை ரயில்வே மேம்பால பணிகள், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் நிறைவடையாமல் உள்ள புதை சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், உறையூர், புத்தூர், நீதிமன்றம், வயலூர் சாலைகளில் தொடரும் போக்குவரத்து நெரிசல், நிறைவேற்றப்படாமல் உள்ள பஞ்சப்பூர்- ஜீயபுரம் அரைவட்ட சுற்றுச்சாலை திட்டம் போன்றவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என இத்தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,13,050
பெண்கள் - 1,22,817
திருநங்கைகள் - 36
மொத்தம் - 2,35,903