தமிழகம்

திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு?

செய்திப்பிரிவு

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாக உள்ளது திருத்துறைப்பூண்டி தொகுதி. திருத்துறைப்பூண்டி என்றால் ‘நீர்நிலைகளின் கரையில் அமைந்த ஊர்’ என்று பொருள். இந்த தொகுதியில் உள்ள முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் உலகப் பிரசித்தி பெற்றது.

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில், ஜாம்புவானோடை தர்கா, உதயமார்த் தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றதாகும். இந்தத் தொகுதியில் நெல் உற்பத்தி மற்றும் முத்துப்பேட்டை பகுதியையொட்டி மீன்பிடி தொழில், இறால் பண்ணை தொழில்கள் நடைபெறுகின்றன. இங்கு சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இத்தொகுதியில் திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 93 கிராம ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பெருமளவு வசிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சமூகத்தினர் உள்ளனர். இந்த தொகுதியில் இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 12 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

          

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் தற்போதைய எம்எல்ஏவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து மீண்டும் களம் காண்கிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ உத்திராபதியின் மகன் பாலதண்டாயுதம், நாதக சார்பில் ஆர்.வினோதினி, தவெக சார்பில் எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திருத்துறைப்பூண்டியில் பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரூ.15 கோடிக்கு கூடுதலாக புதிய கட்டிடங்கள், ரத்த வங்கி, திருத்துறைப்பூண்டியில் அறிவுசார் மையம், விளையாட்டரங்கம், ஆறுகளில் ரூ.15 கோடியில் புதிய தடுப்பணைகள், முத்துப்பேட்டையை தனி வட்டமாக உருவாக்கியது, முத்துப்பேட்டையில் அரசு மகளிர் கல்லூரி என ரூ.500 கோடிக்கும் அதிகமாக திட்டங்களை கொண்டு வந்ததாக கூறி எம்எல்ஏ க.மாரிமுத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

மேலும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக சொந்த முயற்சியில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி பலருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறி ஆதரவு திரட்டி வருகிறார். அதேபோல, அதிமுகவின் பாலதண்டாயுதம், கடந்த அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும், அதிமுக தேர்தல் அறிக்கையை முன்வைத்தும், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும் பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வெற்றியை தன்வசமாக்க இரு கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

எதிர்பார்ப்புகள்

* திருத்துறைப்பூண்டி சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்.

* விக்கிரபாண்டியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

* திருத்துறைப்பூண்டியில் உள்ள எழிலூரில் புதிதாக ஏரி அமைக்க வேண்டும்.

* முத்துப்பேட்டை வட்டத்துடன் இணைக்கப்பட்ட களப்பால், வெங்கத்தான்குடி, குறிச்சிமூளை, குலமாணிக்கம் ஊராட்சிகளை மன்னார்குடி அல்லது திருத்துறைப்பூண்டி வட்டத்துடன் இணைக்க வேண்டும்.

* அனைத்து பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளிலும் மண்டியுள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

இதுவரை வென்றவர்கள்

1962 - ஏ.கே.சுப்பையா - இ.கம்யூ.

1967 - ந.தர்மலிங்கம் - திமுக

1971 - மணலி கந்தசாமி - இ.கம்யூ.

1977 பி.உத்திரபதி - இ.கம்யூ.

1980 - பி.உத்திரபதி - இ.கம்யூ.

1984 - பி.உத்திரபதி - இ.கம்யூ.

1989 - கோ.பழனிச்சாமி - இ.கம்யூ.

1991 - கோ.பழனிச்சாமி - இ.கம்யூ.

1996 - கோ.பழனிச்சாமி - இ.கம்யூ.

2001 - கோ.பழனிச்சாமி - இ.கம்யூ.

2006 - கா.உலகாநாதன் - இ.கம்யூ.

2011 - கா.உலகானந்தன் - இ.கம்யூ.

2016 - பி.ஆடலரசன் - திமுக 

2021 - க.மாரிமுத்து - இ.கம்யூ.

வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண்கள் - 1,11,001

பெண்கள் - 1,14,348

மூன்றாம் பாலினத்தவர் - 14

மொத்தம் - 2,25,363

SCROLL FOR NEXT