திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாக உள்ளது பல்லடம். இந்தத் தொகுதியானது சட்டப்பேரவைத் தொகுதிகள் வரிசையில் 115-வது இடத்தில் உள்ளது. பல்லடம் நகராட்சி, பல்லடம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் 10 வார்டுகளையும் உள்ளடக்கியுள்ளது.
முக்கியத் தொழில்கள்
இத்தொகுதியில் கறிக்கோழி உற்பத்தி, விசைத்தறிகள் துணி உற்பத்தி பிரதானமாக உள்ளது. கறிக்கோழிப் பண்ணைகளில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
அதேபோல, விசைத்தறிகள் மூலமாக நாள்தோறும் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 60 லட்சம் மீட்டர் ஜவுளி உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. மேலும், கிராமங்களில் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. திருப்பூருக்கு மிக அருகில் உள்ளதால் பின்னலாடைகளும், சாய ஆலைகளும் கணிசமான அளவு உள்ளன.
இந்த தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அடுத்தபடியாக ஆதிதிராவிடர், நாயுடு, வன்னியர், செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பரவலாக வசிக்கின்றனர்.
தொகுதியின் முக்கியப் பிரச்சினைகள்
பல்லடம் நகரப் பகுதிகளில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாக பேருந்து நிலையம், நான்கு சாலை சந்திப்பு, மாணிக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்
பல்லடம் தொகுதியானது கடந்த 1957-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வருகிறது. இதில், பிரஜா சோசலிச கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன், திமுக வேட்பாளர் முத்துரத்தினத்தை விட 32,691 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் 2011-ம் ஆண்டு வெற்றி பெற்ற கே.பி.பரமசிவத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் 2021-ம் ஆண்டு திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.செல்வராஜ் தற்போது பல்லடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர்களைத் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் கே.வி.தமிழ் இனியனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கே.ராம்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதியில் முக்கியக் கட்சிகளின் சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், திமுக-அதிமுக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.
இந்த 2 கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அரசியல் அனுபவம் வெற்றிக்கு கைகொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, அதிமுக தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெறுமா அல்லது திமுக புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் 1,59,554
பெண் 1,70,265
3-ம் பாலினத்தவர் 30
மொத்த வாக்காளர்கள் 3,29,849