தமிழகம்

அரை நூற்றாண்டாக திமுக வெற்றிபெற முடியாத நிலக்கோட்டை தொகுதியில் வெல்லப்போவது யார்?

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரை நூற்றாண்டாக திமுக வெற்றிபெற முடியாமல் உள்ள தொகுதி நிலக்கோட்டை. இந்த முறையாவது வெற்றிபெறுமா அல்லது அதிமுக நிலக்கோட்டை தங்கள் கோட்டை என்பதை நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் முதன்முறையாக பெண் வேட்பாளராக நாக ஜோதி நிறுத்தப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் நடப்பு எம்எல்ஏ. தேன்மொழி மீண்டும் களமிறங்குகிறார். தவெக சார்பில் அய்யனார், நாம் தமிழர் கட்சி சார்பில் கயிலைராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நிலக்கோட்டை தொகுதி யில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகள். நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அம்மைய நாயக்கனூர், சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.

தொகுதி பிரச்சினைகள்

தொகுதியில் வைகை ஆறு ஓடினாலும் கிராமப்புறங்களில் இன்னமும் தாகம் தீரவில்லை. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதேபோல் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் பெரும்பாலான நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன. பாசன வசதி செய்து நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தொகுதி முழுவதும் பூ விவசாயம் அதிகம் நடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் சேர்ந்திருந்தபோது, ‘மதுரை மல்லி’ எனப் பெயர் பெற்றுத் தந்ததே நிலக்கோட்டை பகுதி தான். இங்கிருந்து பூக்கள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. நிலக்கோட்டை பூ மார்க் கெட்டில் போதிய வசதிகள் இல்லை. பூக்கள் அதிகம் விளையும் பகுதி என்பதால் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாகும்.

தற்போதைய கள நிலவரம்:

நிலக்கோட்டை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தவெக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களும் திமுக, அதிமுகவுக்கு இணையாக பிரச்சாரத்தை முன்னெ டுத்து செல்கின்றனர். வழக்கத்தைவிட இந்தமுறை திமுக பெண் வேட்பாளரை நிறுத்தி அதிமுகவுக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது திமுக. 50 ஆண்டுகளாக நிலக்கோட்டை தொகுதியில் நேரடியாக திமுக வெல்ல முடியவில்லை.

இந்த முறையும் தொகுதியை கைப்பற்றி நிலக்கோட்டை தங்கள் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.1977 முதல் இடைத் தேர்தலுடன் சேர்த்து அதிமுக 7 முறை வென்றுள்ளது. ஏ.எஸ்.பொன்னம்மாள் காங்கிரஸ் சார்பில் மூன்று முறையும், சுயேச்சையாக ஒரு முறையும் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் புதிய தமிழகம் கட்சி வெற்றிபெற்றது. 2006 பொதுத்தேர்தல், 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல், 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்ற தேன்மொழி தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

கடைசியாக 1971 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட முனியாண்டி வெற்றிபெற்றார். அதன்பிறகு திமுக சார்பில் போட்டியிட்ட யாரும் இங்கு வெற்றிபெறவில்லை. திமுக வேட்பாளர் தங்கள் இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்போவது, ரூ.8 ஆயிரம் கூப்பன் என தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார். அதேபோல, அதிமுக வேட்பாளரும் பழனிசாமி பட்டியலிட்ட தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி கிராமங்கள்தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தவெக வேட்பாளர் இளைஞர்களை கவர்ந்து வருகிறார். இதனால் யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

வாக்காளர்கள் எண்ணிக்கை

  • ஆண்கள் - 1,08,300

  • பெண்கள் - 1,12,780

  • மூன்றாம் பாலினத்தவர் - 14

  • மொத்தம் - 2,21,094

SCROLL FOR NEXT